சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் இன்று வரை (மார்ச் 23) உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.151.93 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருட்களைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாக்காளர்களின் வசதியை உறுதி செய்யவும், மேம்பட்ட வாக்குப் பதிவு அனுபவத்தை வழங்கவும் இந்திய தேர்தல் ஆணையம் பல முன்முயற்சிகளை எடுத்துள்ளது.
வாக்காளர் தகவல் சீட்டை (Voter Information Slip) மேலும் எளிதாக்கும் வகையில், அதில் வாக்காளரின் வரிசை எண் மற்றும் பாகம் எண் ஆகியவை தெளிவாகத் தெரியும் வண்ணம் தேர்தல் ஆணையம் மாற்றியமைத்துள்ளது. இதன் மூலம் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடியைக் கண்டறிவதும், இதர விவரங்களைத் தெரிந்துகொள்வதும் எளிதாகும்.
வாக்குப் பதிவு நாளன்று வாக்காளர்களின் வசதிக்காக, வாக்குச்சாவடிகளில் கைபேசிகளை (Mobile Phones) ஒப்படைக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியின் நுழைவாயில் அருகே மிகவும் எளிமையான 'புறா கூண்டு போன்ற ' (Pigeon hole) பெட்டி அல்லது சணல் பைகள் அமைக்கப்படும்; அங்கு வாக்காளர்கள் தங்களது கைபேசிகளை பாதுகாப்பாக வைத்துச் செல்லலாம்.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற 'ECINET’ என்ற ஒருங்கிணைந்த ஒற்றை இணையதளத்தைத் செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இதில் ஆணையத்தின் 40-க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் இணையதளங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் வாக்காளர்கள் பின்வரும் சேவைகளைப் பெறலாம், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்தல், வாக்காளர் அடையாள அட்டையில் (EPIC) திருத்தங்கள் மேற்கொள்வது, வாக்குப்பதிவு சதவீத விவரங்களைப் பார்த்தல், வாக்குச்சாவடி விவரங்களை அறிதல் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான உதவிகளைப் பெறுதல், தேர்தல் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுதல் போன்றவைகள் ஆகும். ECINET செயலியை கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பணம், மதுபானம், போதைப்பொருள் மற்றும் இதர தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கண்காணித்துத் தடுக்க மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் அமலாக்கக் குழுக்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றன.
இன்று ( மார்ச் 23) வரை பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள் பின்வருமாறு: ரொக்கமாக ரூ.30.53 கோடியும், மதுபானம் ரூ. 0.72 கோடியும், போதைப்பொருட்கள் ரூ.6.47 கோடியும், விலைமதிப்பயற்ற உலோகங்கள் (தங்கம்/வெள்ளி) ரூ.92.02 கோடியும் மற்றும் இதர பொருட்கள்/இலவசங்கள் ரூ. 22.19 கோடியும் என மொத்தம் ரூ.151.93 கோடி பரிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.