ரெகுராமபுரத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம்.

 
தமிழகம்

புதூர் அருகே அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட முட்டையில் அழுகிய கோழி குஞ்சு?

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: புதூர் அருகே அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழி குஞ்சு இருந்ததாக வந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

புதூர் அருகே ரெகுராமபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு தினசரி 20 குழந்தைகள் வருவது வழக்கம். குழந்தைகளுக்கு வாரத்தில் திங்கள், புதன், வியாழன் ஆகிய 3 நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது. இதில், மையத்துக்கு வரும் 1 வயதிலிருந்து 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோரிடம் வாரத்துக்கு 3 முட்டைகள் அப்படியே வழங்கப்படும்.

மற்ற குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் வேக வைத்து, உணவுடன் சேர்த்து முட்டை வழங்கப்படும். இந்நிலையில், கடந்த 20-ம் தேதி 1 வயது குழந்தையின் பெற்றோரிடம் 3 முட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதனை வீட்டுக்கு கொண்டு சென்ற குழந்தையின் பெற்றோர், நேற்று முன்தினம் ஒரு முட்டையை வேக வைத்தபோது, கோழிகுஞ்சு இறந்து அழுகிய நிலையில் வெளியே வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதை கையோடு அங்கன்வாடி மையத்துக்கு எடுத்து வந்து அங்கன் வாடி ஊழியரான சொர்ணமாரியிடம் காண்பித்துள்ளனர். அதற்கு அவர் சரிவர பதில் சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்து, சமூக குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் நேற்று அங்கன்வாடி மையத்துக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளார். பிரச்சினைக்குரிய முட்டையின் ஓடுகளை பரிசோதித்து, அவை அரசு சார்பில் வழங்கப்பட்டதா? அல்லது வெளியே இருந்து வாங்கி வந்த முட்டையா என்பது குறித்து அறிந்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, பெற்றோர் கூறுகையில், அங்கன்வாடி மையத்தை முறையாக பராமரி ப்பது இல்லை. குழந்தைகளுக்கு எதுவும் சொல்லித்தருவதும் இல்லை. முறையான குடிநீர் வசதி இல்லை, குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து பல மாதங்கள் ஆகிவிட்டன.

தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம், எல்இடி டிவி ஆகியவை பயன்படுத்தப்படாமல் பழுதாகி உள்ளது. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் பழுதாகிவிட்டன. கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் உள்ளது. எனவே, அங்கன்வாடி மையத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT