சென்னை: தொடர் மின்வெட்டைக் கண்டித்து நீலாங்கரையில் பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் (ஈசிஆர்) உள்ள நீலாங்கரை பாண்டியன் சாலையில் சுமார் 400 வீடுகள் உள்ளன.
இந்த பகுதியில் சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர்.
ஆனால் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் இரவு நேர மின்தடை தொடர்ந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவும் வழக்கம்போல் மின்தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரைச் சாலையில் திரண்டனர். திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து நீலாங்கரை போலீஸார் சம்பவ இடம் விரைந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மக்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்துசாலை மறியலைத் தொடர்ந்தனர்.
இதற்கிடையே சோழிங்கநல்லூர் தொகுதி தவெக எம்எல்ஏ சரவணமூர்த்தி, மின்வாரிய அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து பொது மக்களிடம் சமாதானம் பேசினார். நீண்ட நேரம் நடந்த சமாதான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மக்கள் போராட்டத்தைக்கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டம் நடைபெற்ற பகுதியின் அருகேதான் தமிழக முதல்வர் விஜய்யின் வீடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.