ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: ‘தமிழகத்தில் பணியாற்றிய காலம் என் வாழ்வின் பொற்காலம்’ என ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கமாக கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், தமிழக மக்களுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்பு சகோதர சகோதரிகளே, தமிழக சொந்தங்களே! உங்கள் எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி.
கடந்த 54 மாதங்கள், உங்களோடு கலந்து பழகி, உங்கள் அன்பில் திளைத்து, தமிழின் பெருமையிலும் தமிழ் மக்களின் பெருமிதத்திலும் மகிழ்ந்திருந்தேன். வாழ்க்கையின் ஓட்டத்தில், இப்போது உங்களைவிட்டுப் பிரிகிற சூழல் வந்தாலும், உங்களோடு செலவிட்ட இந்த நாட்கள், என் வாழ்வின் பொற்கால நாட்கள் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மரபிலும் நவீனத்திலும் சிறந்த மாநிலமான தமிழகத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்று வந்தபோது, கரோனா பெருந்தொற்றின் பாதிப்புகள் முழுமையாக தீரவில்லை. இருப்பினும், நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் என்னைப் பெரிதும் கவர்ந்தன.
உங்களிடம் என்னைக் கவர்ந்த மிகப் பெரும் சிறப்பு– உங்களின் அயராத உழைப்பு, உழைப்பின் களிப்பு. தலைநகரம் சென்னை முதல், நெல்லை யிலும் கன்னியாகுமரியிலும் உள்ள கடைக்கோடி கிராமங்கள், கிழக்குக் கடற்கரை முதல் மேற்கு மலைச் சாரல் என்று பற்பல ஊர்களுக்கும் பகுதிகளுக்கும் சென்றேன்.
ஊர்களின் அமைப்பு, அளவு, வட்டார வழக்குகள் போன்றவைமாறுபட்டாலும், உங்கள் அனைவரின் அன்பும், உழைப்பும், உழைப்பில் நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியும், அறிவு முதிர்ச்சியும் மாறவேயில்லை. மாணவர்களிடம் இருக்கிற துள்ளலையும் சிரிப்பையும் வயது முதிர்ந்தவர்களிடமும் கண்டேன்; உயர் தொழில்நுட்ப விவாதங்களில் காண்கிற நுணுக்கங்களை, உழவாரப் பணியிலும் பார்த்தேன்.
தமிழக இளைஞர்களும் மாணவர்களும், நவீனத்துவத்தின் மேன்மையை முறையாக உணர்ந்திருக்கிறார்கள். நவீனகால தொழில்நுட்ப மேம்பாடுகளை அழகாகப் பயன்படுத்து கிறார்கள். செயற்கை நுண்ணறிவை இயற்கையான செறிவோடு கையாளுகிறார்கள். பல்கலைக்கழகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் சென்றபோது இதைக் கண் டேன்.
மாணவர்களோடும், போட்டித்தேர்வுகளுக்கு ஆயத்தமாகு பவர்களுடனும், பல்வேறு வகையான பயிற்சிகளுக்குத் தயாராகுபவர்களுடனும் உரையாடிய நிகழ்ச்சிகளில், அவர்களின் ஆற்றலும் திறமையும் என்னை வியப்பில் ஆழ்த்தின. சொல்லச் சொல்ல விரியும் என்பதாக என்னுடைய அனுபவங்களும் ஆனந்தமும் விரிந்துகொண்டேபோகின்றன.
இவற்றுக்கெல்லாம் அடிப்படை, நீங்கள் காட்டிய அன்பு. உங்களின் அன்பை விவரிக்க வார்த்தைகள் போதாது. என் நன்றியை உரைக்கவும் வார்த்தைகள் போதாது. அனைவருக்கும் என் அன்பு வணக்கங்களையும் நன்றிகளையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.