திருச்சி/ பெரம்பலூர்/ அரியலூர்: அரிசி, பருப்பு, சர்க்கரை, காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருவது, வீட்டு மாத பட்ஜெட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் பொது மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரிசி, பருப்பு, காய்கறி, மளிகை பொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. அரிசியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது, 25 முதல் 26 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் விலை ரூ.150 வரை உயர்ந்து ரூ.2,500-க்கு விற்பனையாகிறது.
அதேபோன்று உளுந்து கிலோ ரூ.120-ல் இருந்து ரூ.150, துவரம் பருப்பு கிலோ ரூ.120-ல் இருந்து ரூ.140-க்கும் விற்பனையாகிறது. ஜூலை மாதம் முதல் இஞ்சி, பூண்டு, எண்ணெய் ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரிசி, மளிகை கடை வியாபாரிகள் கூறியது: இந்தாண்டு ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் நெல் விளைச்சல் குறைவாக இருந்தது. இதனால், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் பொன்னி அரிசியின் வரத்து கடந்தாண்டை ஒப்பிடுகையில் தற்போது கணிசமாக குறைந்துள்ளது. அதுவே அரிசி உயர்வுக்கு காரணம் என்றனர்.
அதேபோன்று, சர்க்கரை கிலோ ரூ.48 என இருந்த நிலையில், ஆக.10-ம் தேதிக்கு பிறகு சர்க்கரையின் விலை கிடுகிடுவென உயர்ந்து தற்போது ரூ.70-க்கு சில்லறை விற்பனையில் விற்பனையாகிறது.
ஒரே மாதத்தில் கிலோவுக்கு ரூ.22 வரை உயர்ந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கரும்பு உற்பத்தி குறைவு, இ20 பெட்ரோலில் சர்க்கரை மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என கருதப்படுகிறது. இந்த விலை உயர்வால் டீ, காப்பி, இனிப்புகளின் விலை உயர வாய்ப்புள்ளது.
இதுகுறித்து அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் உரிமையாளர் கணேசன் கூறுகையில், “வாடிக்கையாளர்களுக்காக தற்போது வரை எந்த இனிப்பு பண்டங்கள் விலையும் உயர்த்தப்படவில்லை. மேலும், பண்டிகை காலங்களுக்கான இனிப்பு விற்பனை விலைகள் முடிவு செய்யப்பட்டு விலைபட்டியல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதனால் விலை உயர்வு குறித்து யோசனை செய்யவில்லை. சர்க்கரை மட்டுமின்றி மற்ற மூலப் பொருட்களான வெல்லம், நாட்டு சர்க்கரை விலையும் உயர்ந்து வருகிறது. அதை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம், சர்க்கரை விலை குறையவில்லை என்றால் விலை உயர்வு குறித்து யோசனை செய்ய வேண்டும்” என்றார்.
ஜூலை மாதம் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.90 வரை விற்பனையாகிறது. பெரிய வெங்காயம் ரகத்துக்கு ஏற்ப கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது. காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளது.
வீட்டு பட்ஜெட்டில் பாதிப்பு அரிசி, பருப்பு, சர்க்கரை, காய்கறிகளின் விலை உயர்வு வீட்டு மாத பட்ஜெட்டில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என கவலையுடன் தெரிவித்த பொதுமக்கள், ஆயுதபூஜை, தீபாவளி என பண்டிகை காலங்கள் வருவதால் கட்டாயம் இந்த விலைவாசி உயர்வை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.