சென்னை: தமிழகத்தில் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய்யை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ ஏற்கெனவே சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களோடு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ள நிலையில், தற்போது அரிசியின் விலையும் தொடர்ந்து 60 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்திருப்பது ஏழை, எளிய சாமானிய மக்களின் மீது கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரை உரிய நேரத்தில் பெற்றுத் தராத தவெக அரசால், காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் சாகுபடிப் பரப்பளவு குறைந்ததோடு, குறுவை சாகுபடியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதோடு, மக்களின் அடிப்படைத் தேவையான அரிசியின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளதால், ஒரு வேளை உணவுக்கே ஏழை, எளிய மக்கள் சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியை பயன்படுத்தலாம் என்றால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன், சட்டப்பேரவையில் சொன்னதைப் போலவே நியாய விலைக் கடை அரிசி ஆடு, மாடுகளுக்கு வழங்கும் நிலையில் தரமற்றதாக இருப்பதால் அதையும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
தவெக ஆட்சி பொறுப்பேற்ற இந்த 5 மாதங்களில் மட்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, பால் தட்டுப்பாடு, மறைமுக மின் கட்டண உயர்வு, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு என மக்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய அனைத்து அத்தியாவசிய விவகாரங்களிலும் தவெக அரசு மெத்தனமான போக்குடன் செயல்படுவதால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது.
எனவே, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். பொதுமக்கள் அனைவருக்கும் நியாயமான விலையில் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை முதல்வர் விஜய் உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.