சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் இன்று (செப்.18) தலைமைச் செயலகத்தில் நடந்தது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு தாய் - சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது.
கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்துக்காக மருத்துவமனையைத் திட்டமிடும் முறை, கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டுக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் (PICME) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு மாநிலத்தில் தாய் - சேய் நலக் குறியீடுகள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், 2026 ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை ஜூன் 23-ம் தேதி வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன என்று தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6ல் (National Family Health Survey-6) பதிவாகியுள்ளது.
இவற்றில் 4.20 லட்சம் பிரசவங்கள் (53%) அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. அதில் 90 சதவீதம் சீமாங் மையங்களில் (CEmONC Centres) நடைபெறுகின்றன. இதன்மூலம், பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்வதில் பொது சுகாதார அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்படும். அதற்கென தனித்துவமான வரிசை எண்ணும் (Unique Serial Number), சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் (Tamper-proof Packaging) வழங்கப்படும். இத்திட்டத்துக்காக முதல் தவணையாக 1 லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள். PICME-யில் பதிவு செய்யப்பட்டு RCH அடையாள எண் (RCHID) பெற்றிருக்க வேண்டும்.
இந்தத் திட்டம் தமிழக முதல்வரால் செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கி வைக்கப்படவுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் ஜூன் 22-ம் தேதி முதல், திட்டம் தொடங்கப்படும் நாள் வரை பிறக்கும் குழந்தைகளுக்கு 107 மையங்களில் (Hubs) தினமும் 100 குழந்தைகள் வீதம் செப்டம்பர் 28 முதல் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் முதல்வரால் தொடங்கப்படும் நாளில் இருந்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.