இரட்டைமலை சீனிவாசன்
சென்னை: சமூக சீர்திருத்தவாதியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும் இருந்த இரட்டைமலை சீனிவாசனின் 81-வது நினைவு தினம் இன்று. இதையொட்டி, பல்வேறு அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் தலைவர்கள் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மாணிக்கம் தாகூர்: “ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் இரட்டை மலை சீனிவாசனின் நினைவு நாளான இன்று, அவருக்கு எங்களது நினைவஞ்சலியை செலுத்துகிறோம்.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
கனிமொழி: திமுக எம்பி கனிமொழி, “ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, உரிமை, அரசியல் பிரதிநிதித்துவத்திற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த சமூகப் போராளியும், திராவிட இயக்கத்தின் முன்னோடியுமான 'திராவிட மணி' இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாள் இன்று. சமத்துவமும் சமூக நீதியும் தழைத்திட அயராது பாடுபட்ட அன்னாரின் நினைவைப் போற்றி வணங்குகிறேன்.” என்று கூறியுள்ளார்.
சீமான்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், சமவுரிமை பெற்றுக் கண்ணியமாக வாழவும் பாடுபட்டதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகநீதிப் போராளி.
“எந்தச் சொல் உன் மீது இழிச்சொல்லாகச் சுமத்தப்படுகிறதோ, அந்தச் சொல்லை நீ எழுச்சிச் சொல்லாக மாற்றாத வரை உனக்கு விடுதலை இல்லை” என்று முழங்கிய புரட்சியாளர். வர்ணாசிரம கோட்பாட்டிற்கு எதிராக ஒரு மாற்றுக் கோட்பாட்டை நீ உருவாக்கிக்கொள்ளாத வரை உனக்கு விடுதலை இல்லை என்று கற்பித்த பெருந்தகை.
லண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்குக் குரல்கொடுத்த போராளி. சாதியக் கொடுமைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை முன்மொழிந்து அவை நிறைவேற காரணமான சமூகச் சீர்திருத்தவாதி. அண்ணல் காந்தியடிகளுக்கு தமிழ்ப் படிக்கவும், தமிழில் கையெழுத்திடவும் கற்றுக்கொடுத்த தமிழறிஞர்.
இரட்டைமலை சீனிவாசனாரின் நினைவு நாளில் சமத்துவச் சமுதாயம் உருவாக்கிட வேண்டும் என்ற அவருடைய உயரிய கனவினை நிறைவேற்ற தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்ற உள உறுதியோடு, நம்முடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்.” என்று தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை: வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த ஐயா இரட்டைமலை சீனிவாசனின் நினைவு தினம் இன்று. அரை நூற்றாண்டுக்கும் மேலாக, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, சமூக முன்னேற்றம், சமத்துவம் ஆகியவற்றுக்காகப் போராடிய முன்னோடிகளில் ஒருவர்.
பஞ்சமி நிலங்களை மீட்கப் போராடியவர். தீண்டாமை ஒழிப்புக்காகவும், சமத்துவ சமுதாயம் அமையவும், தளர்வில்லாமல் உழைத்தவர். சமுதாயச் சிந்தனையாளர், ஊடகவியலாளர், அரசியல் தலைவர் எனப் பன்முகம் கொண்ட தலைவராக விளங்கிய ஐயா இரட்டைமலை சீனிவாசனின் புகழைப் போற்றி வணங்குகிறோம்.” என்று கூறியுள்ளார்.