சென்னை: சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பதவி வகித்து ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.
கடலூர் மாவட்டம் கர்நாதம் கிராமத்தில் 1955-ல் பிறந்த கர்ணன், 1983-ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து, வழக்கறிஞராக பணியாற்றினார்.
சுவாமிநாதன் - கமலம் ஆகியோரின் எட்டு குழந்தைகளில் இரண்டாவதாக பிறந்தவர் சி.எஸ்.கர்ணன். தனது மனைவி சரஸ்வதியின் விருப்பத்துக்கேற்ப கருணாநிதி என்ற தனது இயற்பெயரை கர்ணன் என 1991-ல் மாற்றிக்கொண்டவர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் பதவியேற்றார். பின்னர் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கொல்லத்தா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 8 ஆண்டுகளுக்கும் மேலாக உயர் நீதிமன்றங்களில் பணியாற்றிய நீதிபதி சி.எஸ்.கர்ணன், 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதி ஓய்வு பெற்றார்.
சென்னையில் வசித்து வந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (நவ.13) காலை இயற்கை எய்தினார்.
தனது பணி காலத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட 7 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடியாணை பிறப்பித்து சர்ச்சையில் சிக்கியவர் நீதிபதி கர்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.