தமிழகம்

தமிழக காவல்துறை அரசின் சூழ்நிலை கைதியாக இருக்கிறது - பொன் மாணிக்கவேல்

என்.சன்னாசி

மதுரை: தமிழக காவல்துறை அரசின் சூழல்நிலை கைதியாக இருக்கிறது என்று பூர்ணசந்திரன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

மதுரையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி ஆடியோ ஒன்றை வெளியிட்டு பூர்ணச்சந்திரன் என்பவர் 2 நாளுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் இந்து அமைப்பினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் முன்னாள் காவல்துறை ஐஜி பொன்மாணிக்கவேல் பூர்ணச்சந்திரன் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி, பெற்றோரை நேரில் சந்தித்து நேற்று ஆறுதல் கூறினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இச்சம்பவம் நடந்தபோது, மதுரையில் தான் இருந்தேன். உடனே நான் வரவில்லை. ஆடியோ தகவல்களை சேகரித்து விசாரித்துவிட்டு வந்தேன்.

கொலை என்பது ஒருவர் மற்றொருவரை கொல்வது. இது எளிதில் செய்திடலாம். தற்கொலை சாதாரணமல்ல. இதற்கெல்லாம் தற்கொலை செய்யலாமா என கேட்பர், அறிவுரை கூறுவர். நான் அவர்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. எனது நோக்கம் பூர்ணச்சந்திரன் குழந்தைகளின் எதிர்காலத்தை பார்க்கவேண்டும். அவரது ஆடியோவில் தற்போதைய அரசு, நீதிபதி பெயர், எதற்காக தற்கொலை, பெற்றோர், மனைவி, குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்கிறார். என்ன காரணமென தெளிவாக சொல்கிறார். தற்கொலைக்கு யார் காரணம். தூண்டுதல் யார் என்ற கேள்வி எழுகிறது.

தமிழகத்தின் தலைவராக (முதல்வர்) இருப்பவர் மு.க. ஸ்டாலின். பூர்ணச்சந்திரன் இறக்கும்போது, திமுகக்காரர்கள் என, கூறுகிறார். திமுகவில் யார் இறந்தாலும் யாரும் வரமாட்டார்கள் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. பொது நலன் கருதி அவர் உயிரிழந்துள்ளார். திமுகக்காரர்கள் எவ்வளவு பெரிய நன்றி கெட்டவர்கள் என தெரிகிறது. நான் எந்த கட்சியை சேர்ந்தவனும் அல்ல. எங்களது தெருவில் நல்ல வேலை செய்வோருக்கு ஒட்டுப் போடுவேன்.

தேர்தல் பக்கம் வரக்கூடாது என நினைத்தேன். இந்த விஷயத்தில் ஸ்டாலினை தோற்கடிக்க கடுமையாக பிரச்சாரம் செய்வேன். பூர்ணச்சந்திரன் உயிரிழப்புக்கு களங்கம் கற்பிப்போர் கீழத்தரமான பிறவிகள். இங்கு வந்தால் எனக்கு புகழ் என நினைத்து வரவில்லை. உலகத்திலுள்ள இந்துக்கள் என்னை நம்புங்கள். சாதாரணமாக அவர் உயிரிழக்கவில்லை. இரு குழந்தைகளை தெருவில் விட்டுச் சென்றுள்ளார். பணத்திற்காக அல்ல அவரது தற்கொலை.

அப்படி யாரும் கூறினால் அவர்களை தற்கொலை செய்ய சொல்லுங்கள். எனது சொத்துக்களை விற்று பணம் தருகிறேன். பூர்ணச்சந்திரன் காரியத்திற்கு மீண்டும் வந்து அஞ்சலி செலுத்துவேன். தமிழகம் மட்டுமின்றி உலகிலுள்ள இந்துக்களும் வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தவேண்டும். வீட்டிலேயே முருகன் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தலாம்.

1947க்கு பிறகு தீபம் ஏற்றுவதற்காக யாரும் உயிரிழக்கவில்லை. இதுவே முதல் முறை. இரு குழந்தைகளுக்காக அரசிடம் பிச்சை எடுக்கக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு நாம் ரூ. 4.40 லட்சம் கோடி கொடுக்கிறோம். திமுக குடும்பத்தில் இருந்து ஒருவரும் இங்கு வந்து ஆறுதல் கூறவில்லை. அவரது தற்கொலைக்கு வேறு நோக்கம் இல்லை. ஆன்மீகம் மட்டுமே. இந்த நபர் 9 பேருடன் சேர்ந்து குடித்துவிட்டு உயிரிழந்து இருந்தால் விமானத்தில் சென்று மு.க. ஸ்டாலின் தலா ரூ. 10 லட்சம் வழங்கி இருப்பார்.

ஒருவரை கைது செய்ய செல்லும் போலீஸ் அதிகாரி பாதுகாப்புக்காக துப்பாக்கி கொண்டு செல்லவேண்டும். அப்படி ஒரு போலீஸ் அதிகாரி செல்லாமல் குத்துப்பட்டு உயிரிழந்ததற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி ரூ.1 கோடி நிதி வழங்கினார். ஓட்டு வங்கியை தான் அரசியல்வாதிகள் பார்க்கின்றனர். இனிமேல் மதுரைக்கு வந்தால் இங்கு வந்துவிட்டு தான் செல்வேன். பூர்ணசந்திரன் ஆடியோவில் ஜி.ஆர். சுவாமிநாதன் பற்றி கூறுகிறார். நீதிபதியின் நேர்மைக்கு 10 ஆயிரம் கையெழுத்து போடுவேன்.

எனக்கு எதிராக வாதாடியவர் ஜிஆர்எஸ். முருகனின் அடிமை தற்கொலை செய்துள்ளான். இதற்காக மக்கள் கொத்து கொத்தாக மதுரைக்கு வந்து அஞ்சலி செலுத்தவேண்டும். இறைவனுக்காக அவர் தற்கொலை செய்ததற்கு காரணம் அரசு தான் என, அவரது ஆடியோவிலும் சொல்லி இருக்கிறார். கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தால் ஓடிச் சென்று நிவாரணம் கொடுக்கிறீர்கள்.

திமுகக்காரன் என, சொன்னாலும் யாரும் வரவில்லை. இரு குழந்தைகளுக்கு எதிர்கால கல்விக்கு அரசிடம் பிச்சை எடுக்காமல் இருக்க, முழு நிதி சேகரிக்க முயற்சிப்பேன். அரசிடமல்ல வெளிநாட்டு இந்துக்கள் மூலமும் நிதியை திரட்டி குழந்தைகளின் பெயரில் டெபாசிட் செய்ய முயற்சி எடுப்பேன்.

தமிழகத்திலுள்ள காவல்துறையில், அதிமுக காவல்துறை, திமுக காவல்துறை என பிரிந்து கிடக்கிறது. காவல்துறையினர் பிறவியில் நல்லவர்கள். அரசின் சூழல்நிலை கைதிகளாக இருக்கின்றனர். மாநகர ஆணையர் பற்றி எதுவும் சொல்லக்கூடாது. அவர் பாவம். நான் ஆணையராக இருந்திருந்தால் உத்தரவை 100 சதவீதம் நிறைவேற்றி இருப்பேன். சட்டத்திற்கு எதிராக, புறம்பாக இருக்கும் வரையிலும் நான் அரசு ஊழியர் அல்ல. அரசு ஊழியன் சட்டத்தின்படி நடக்கவேண்டும்.

நீதிமன்ற உத்தரவை மதிக்காதவர்கள் போலீஸ் அல்ல. ஒரு அரசு என்பது 50 சதவீதம் சட்டபடியும், சட்டத்திற்கு விரோதமாகவும் இருக்கும். அமைச்சர்கள் மூலம் 25 சதவீத பணத்தை வீட்டில் வந்து கொடுக்கச் செய்வர். இது எல்லா அரசிலும் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT