அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை: 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-க்கு முன்பிலிருந்து பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
2010 ஆகஸ்ட் 23-க்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் தனித் தீர்மானத்தை இன்று சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்தார்.
இந்தத் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பாமக, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஆதரவைத் தெரிவித்தன. இதனையடுத்து, ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்த தீர்மானத்தின் விவரம்: தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் 23.8.2010 ஆம் தேதியிட்ட அறிவிக்கையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்குரிய ஒரு தகுதியாக ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.
ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக குறிப்பாக 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித இடையூறும் இன்றி தங்களது பணியை சிறப்பாக ஆட்சி வரும் நிலையில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி என்பது கட்டாயமாகப்பட்டுள்ள நிலையில், பணியில் இருக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று 01.09.2025 ம் நாளிட்ட உரிமையியல் மேல்முறையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட உத்தரவினால் தமிழ்நாட்டில் சுமார் 3,28,701 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் தான் பதவி உயர்வினை பெற இயலும், மேலும் தேர்ச்சி பெறவில்லை எனில் பணியிழப்புக்கும் ஆளாக நேரிடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் சீராய்வு மனுவின் மீதான 29.5.2026 ஆம் நாளிட்ட தீர்ப்பில், பணியில் உள்ள ஆசிரியர்கள் 31.8.2026-க்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை தடையின்றி பணியாற்றி ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை தகுதித் தேர்வு எழுத வற்புறுத்துவது அவர்களின் வாழ்வாதார உரிமையை பாதிக்கும் செயலாகும். எனவே இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, நீண்ட கால சேவை, வாழ்வாதாரம் மற்றும் நலன் ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கில் பின்வரும் தீர்மானம் முன்மொழியப்படுகிறது.
தமிழ்நாடு பள்ளிகளில் 23.8.2010 க்கு முன்பாக அன்றைய நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்களின் நீண்ட கால பணி அனுபவம் மற்றும் பணி பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேர்வில் இருந்து முழுமையான மற்றும் நிரந்த விலக்கு அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.
இதற்கு ஏற்ப இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் பிரிவு 23ல் உரிய சட்ட திருத்தம் மேற்கொண்டு 23.8. 2010க்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் தேவையான சட்டபூர்வ ஏற்பாடுகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் வழியாக இது தொடர்பாக தெளிவான மற்றும் ஒருமித்த அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.
மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட உரிய பணிப்பலன்கள் எவ்வித தடையும் இன்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசை பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.