சென்னை: ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அம்மா உணவகம் அமைக்க மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மேயர் பிரியா பேசியதாவது: சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்ணியக்குறைவாக விமர்சித்த முதல்வருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற 4 மாதங்களில் தமிழகம் முழுவதும் குற்ற சம்பவங்கள், கொலைகள், பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன.
சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள், ஏழை எளிய மக்களை பெரிதும் பாதிக்கும் விலைவாசி உயர்வு, ஆவின் பால் தட்டுப்பாடு, மின் கட்டண உயர், இரவு நேரங்களில் மின்வெட்டால் தூக்கமிழந்து தவிக்கும் மக்கள் என நிர்வாக சீர்கெட்டால் தமிழகம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து மற்றும் மீனம்பாக்கம் விமான நிலையத்தை தனியாருக்கு தாரைவார்க்க பிரதமரை வலியுறுத்துவது போன்ற எண்ணற்ற தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.
அவையில் அம்பேத்கர் படம் இடம் மாற்றம் செய்யப்பட்டதற்கு விசிக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விசிக, திமுக கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, ‘‘இந்த மாமன்றத்தில் அம்பேத்கர் படம் வைத்ததே திமுக ஆட்சியில்தான். அம்பேத்கரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அவர் அனைவருக்குமானவர்’’ என்றார். இதையடுத்து விசிக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ரூ.10 ஆயிரம் அபராதம்
தொடர்ந்து, மாநகரில் செல்லப்பிராணிகளை கைவிடுவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கவும், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அம்மா உணவகம் அமைக்கவும், நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 5-வது குறுக்கு தெருவின் பெயர், மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் நினைவாக, ‘டைரக்டர் கே.பாக்யராஜ் தெரு’ என பெயர் மாற்றம் செய்ய அரசின் அனுமதி பெற அனுமதி வழங்கியும் மொத்தம் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன