படம்: சீனிவாசன்
சென்னை: அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகிய 3 பேரின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகிய 3 பேரும் நேற்று (மே 25) தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகரை சந்தித்து, ராஜினாமா கடிதம் அளித்தனர். அதை ஏற்றுக் கொண்டதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் தெரிவித்தார். இதையடுத்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மூவரும் தவெக-வில் இணைந்தனர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி சார்பில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான தலவாய் சுந்தரம், ஓஎஸ். மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை உள்ளிட்டோர் சபாநாயகரைச் சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக அவர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார்.
அந்தக் கடிதம் பரிசீலனையில் இருப்பதாக பேரவைத் தலைவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தங்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் தருகிறார்கள். அந்த கடிதத்தை சபாநாயகர் எற்றது விதிகளுக்கு முரணானது; சட்டத்துக்கு முரணானது. இதை ஏற்கக்கூடாது என நாங்கள் அதிமுக சார்பில் எங்கள் கோரிக்கையை மனுவாக தந்திருக்கிறோம்.
மூன்று பேரும் ராஜினாமா செய்த ஐந்து நிமிடங்களில் சபாநாயகரின் அலுவலகத்துக்கு மேல் தளத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் அந்த மூன்று பேருக்கும் தவெகவில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது. பிரிண்ட் செய்யப்பட்டு, லேமினேட் செய்யப்பட்ட அந்த உறுப்பினர் அட்டை அவ்வளவு விரைவாக வழங்கப்படுகிறது. இது தலைமைச் செயலகமா அல்லது தவெக தலைமை அலுவலகமா என்பது எங்களுக்குப் புரியவில்லை. இது தொடர்பாக பொதுமக்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய நடவடிக்கையை அரசு ஊக்குவித்தால் அது குதிரை பேர நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அதிமுக நிர்நாகி இன்பதுரை, “சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை நாங்கள் பார்ப்போம். மூன்று பேர் ராஜினாமா செய்தது அரசிதழில் வெளியிடப்பட்டாலும் அதை திரும்பப் பெறும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு. சபாநாயகர் சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்” என தெரிவித்தார்.
இதற்கிடையில், அதிமுக எம் எல் ஏக்கள் ராஜிநாமா செய்த மதுராந்தகம் (தனி), பெருந்துறை, தாராபுரம் (தனி) தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.