காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மக்களவைத் தேர்தலைப் புறக்கணித்த ஏகனாபுரம் மக்கள் இந்த முறை ஆர்வமுடன் வாக்களித்தனர்.
இந்தக் கிராமத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்தில் 25 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. சென்னைக்கு இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 5,746 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த அரசு முடிவு செய்தது.
இதற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள், நிலம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரி 1,300 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது, தங்கள் கோரிக்கைகள் செவி சாய்க்கப்படாததைக் கண்டித்து ஏகனாபுரம் மக்கள் ஒட்டு மொத்தமாகத் தேர்தலைப் புறக்கணித்தனர்.
ஒரு சில அரசு ஊழியர்களைத் தவிர, ஊரே மொத்தமாக வாக்களிக்காமல் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இருப்பினும், தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் போராட்டக் குழுவினர் புதிய முடிவை அறிவித்தனர்.
‘ஜனநாயக ரீதியாக எங்களின் உரிமைகளை நிலைநாட்டவும், எங்களுடன் யார் துணை நிற்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவளிக்கவும் வாக்களிக்கப் போகிறோம்’ என அவர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.
அதன்படி, நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியவுடன் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். காலை 9 மணி அளவிலேயே 25 % வாக்குகள் பதிவாகி இருந்தன.