தமிழகம்

பஞ்சப்பூரில் இருந்து இரவு வேளையில் போதிய பேருந்து சேவை இல்லாமல் மக்கள் அவதி

எம்.கே.விஜயகோபால்

திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் இருந்து இரவு வேளையில் நகரப் பகுதிகளுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் இருந்து தமிழகம் மட்டுமின்றி பெங்களூரு, திருவனந்தபுரம், திருப்பதி, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து பேருந்து சேவை மிகக் குறைவாக உள்ளதுடன், சில பகுதிகளுக்கு பேருந்து சேவையே இல்லை என்றும், இரவு வேளையில் மிக மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு அனுப்பியுள்ள உறையூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ஜி.பெல்சன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: திருச்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் பஞ்சப்பூர் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், பஞ்சப்பூரில் இருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல போதிய பேருந்து சேவை இல்லாமல் படாத பாடு பட வேண்டியுள்ளது.

பஞ்சப்பூரில் இருந்து கே.கே.நகர், தில்லை நகர், உறையூர், ரங்கம், காட்டூர், திருவெறும்பூர், துவாக்குடி என பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல மன்னார்புரம், காந்தி மார்க்கெட், சத்திரம் பேருந்து நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து பேருந்து மாறிச் செல்ல வேண்டியுள்ளது.

இரவு வேளையில் சத்திரம் பேருந்து நிலையத்துக்கு 3 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ரங்கத்துக்கோ, சமயபுரத்துக்கோ செல்ல வேண்டுமெனில் பேருந்து நிலையத்திலேயே விடிய விடிய காத்திருக்க வேண்டியுள்ளது.

அல்லது ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களில் குறைந்தபட்சம் ரூ.500 வரை கொடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, ஏற்கெனவே இருந்ததுபோல மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பாதி பேருந்துகளை இயக்க வேண்டும் என முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு அனுப்பி உள்ளேன் என்றார்.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கூறியது: பஞ்சப்பூரில் இருந்து இரவு வேளையில் 3 மாநகர பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. மேலும், வெவ்வேறு இடங்களில் இருந்து பஞ்சப்பூர் வழியாக 4 கனெக்டிங் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பஞ்சப்பூரில் இருந்து இரவு வேளையில் பெரம்பலூர், கோயம்புத்தூர், துறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் அனைத்து புறநகரப் பேருந்துகளும் சத்திரம் பேருந்து நிலையம் வழியாகத்தான் இயக்கப்படுகின்றன.

இரவு நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என எங்களுக்கு எவ்வித கோரிக்கையும் இதுவரை வரவில்லை என்றனர்.

இந்நிலையில், போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தைப் பிரித்து, திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட போக்குவரத்துக் கழக கோட்டம் அமைத்தால்தான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT