சென்னை: பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனர் அ.மாயவன், நிறுவன தலைவர் சி.ஜெயக்குமார், பொதுச்செயலாளர் மா.குமரேசன் உள்ளிட்டோர் பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்துப் பேசினர். அப்போது ‘டெட்’ தேர்வு தொடர்பான மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்தோருக்கு டெட் தேர்வில் இருந்து உச்ச நீதிமன்றம் விலக்கு அளிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
ஆனால் அனைத்து ஆசிரியர்களுக்கும் டெட் தேர்ச்சி கட்டாயம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனால் ஜூலையில் நடைபெற உள்ள டெட் தேர்வுக்கு ஆசிரியர்கள் எவ்வித தயாரிப்பும் செய்யவில்லை.
எனவே, ஜூலையில் நடத்தப்பட இருக்கிற சிறப்பு டெட் தேர்வை ஒரு மாதம் தள்ளிவைக்க வேண்டும். கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இரண்டாண்டு பணிக்காலத்துக்கு ஒரு மதிப்பெண் என்று கணக்கிட்டு அந்த மதிப்பெண் அவர்களின் டெட் தேர்வு மதிப்பெண்ணுடன் சேர்த்து தேர்ச்சி அறிவிக்க வேண்டும்.
தற்போது உச்ச நீதிமன்றம் டெட் தேர்ச்சி பெறுவதற்கு 2028 வரை அவகாசம் வழங்கியிருப்பதால் பள்ளிக்கல்வித் துறை பட்டதாரி ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலை விரைவாக தயாரித்து அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.