சென்னை: மத்திய- மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு தனது அறிக்கையின் முதல் பாகத்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியது.
மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆராய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் தமிழக அரசு கடந்தாண்டு ஏப்.15-ம் தேதி ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்தது. இதில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கே.அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் தமிழ்நாடு திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மு.நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஆணையம் நேற்று தனது அறிக்கையின் முதல் பாகத்தை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியது. இதில், அதிகாரப் பரவலாக்கத்துக்கும் மாநில சுயாட்சிக்குமான வாதம், அரசமைப்புச் சட்டத் திருத்தம், மாநிலங்களின் ஆட்சிநில ஒருமைப்பாடு, மொழி, ஆளுநர், தொகுதி மறுவரையறை, தேர்தல்கள், கல்வி, சுகாதாரம், சரக்கு மற்றும் சேவை வரி ஆகிய இயல்களை உள்ளடக்கி உள்ளது.
இக்காலத்தில் கூட்டாட்சி முறைக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து விரிவான ஆய்வைமேற்கொண்டுள்ள இந்த அறிக்கை, அரசமைப்புச் சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டு கூட்டாட்சி முறையின் சமநிலையை மீட்டெடுக்கவும், உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சி முறையை வலுப்படுத்தவும் உறுதியான மற்றும் திட்டவட்டமான பரிந்துரைகளை அளித்துள்ளது.
திறந்தநிலை அணுகல்: இந்த முயற்சியின் ஒரு சிறப்பம்சமாக அறிக்கையின் தமிழ்ப் பதிப்புக்கு ‘திறந்தநிலை அணுகல்' (Open Access) வழங்கப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே முதல் முறை ஆகும். அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தமிழ் பதிப்பு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும். எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ, அதிகாரப்பூர்வ பிடிஎப் கோப்பிலிருந்து தமிழ் பதிப்பை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அச்சிடவோ, மறுபதிப்பு செய்யவோ அல்லது விநியோகிக்கவோ முடியும்.
பரந்த அளவில் தேசிய ஈடுபாடு உருவாவதை எளிதாக்கும் வகையில், அறிக்கையின் முதல் பாகத்தை இந்தி, வங்காளம், மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, ஒடியா, பஞ்சாபி மற்றும் அஸ்ஸாமி ஆகிய முக்கியமான இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த அறிக்கை சமர்ப்பிப்பு, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பின் பரிணாம வளர்ச்சியில் தமிழகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பில் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.
இதன் நோக்கம் மத்திய அரசை பலவீனப்படுத்துவது அல்ல. மாறாக மத்திய அதிகாரத்தை முறைப்படுத்துவது ஆகும். இதன்மூலம் மத்திய அரசு தேசிய அளவிலான பொறுப்புகளில் கவனம் செலுத்த முடியும். அதே நேரத்தில் மாநிலங்களுக்குத் தேவையான சுயாட்சியை மீட்டளிப்பதன் மூலம் சிறந்த நிர்வாகத்தை உறுதிசெய்ய முடியும். மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாகச் செய்யக்கூடிய பணிகளில் மத்திய தனது ஆற்றலைச் சிதறவிடுவது, அது மட்டுமே தீர்க்கக்கூடிய பெரிய தேசிய சவால்களிலிருந்து திசைதிருப்ப வாய்ப்புள்ளது.
இந்த அறிக்கை ஆக்கப்பூர்வமான உரையாடல்களைத் தூண்டி, சீரான மற்றும் கூட்டுறவுக் கூட்டாட்சி முறைக்கு வழிவகுக்கும் என்று தமிழக அரசு நம்புகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.