தமிழகம்

“ஸ்டாலின் பேசியது அவர் வகித்த, வகிக்கும் பொறுப்புக்கு உகந்தது அல்ல” - பெ.சண்முகம் கண்டனம்

வெற்றி மயிலோன்

சென்னை: ‘முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாராபுரம் வேட்பாளர் குறித்து சொல்லி இருப்பது, அவர் வகித்த, வகிக்கும் பொறுப்புக்கு உகந்த செயல் அல்ல’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘உருவக் கேலி செயலில் யார் ஈடுபட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்து வந்திருக்கிறது.

மூத்த அரசியல் தலைவர், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாராபுரம் வேட்பாளர் குறித்து சொல்லி இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. அவர் வகித்த, வகிக்கும் பொறுப்புக்கு உகந்த செயல் அல்ல என்பதை சுட்டிக் காட்டுகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று தாராபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது வேட்பாளர் சத்யபாமாவை ‘பெட்டி பாமா, பல்டி பாமா’ என விமர்சித்த அவர், சத்யபாமாவின் உருவம் குறித்தும் பேசியிருந்தார்.

இதனையடுத்து சத்யபாமாவை மு.க.ஸ்டாலின் உருவக்கேலி செய்து இழிவுபடுத்திப் பேசியதாக தமிழக வெற்றிக் கழக மாநில வழக்கறிஞர் அணி சார்பாக தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தும் அலுவலர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரிடம் மு.க.ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான திமுக சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின்.

நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி சத்தியபாமா குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார். திமுக சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள் திமுகவினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் திமுகவின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலங்காலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.

பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.

தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி திமுகவிற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT