தமிழகம்

“பயிர்க் கடன் தள்ளுபடிக்காக போராடி கைதான விவசாயிகளை விடுதலை செய்க” - மு.வீரபாண்டியன்

வெற்றி மயிலோன்

சென்னை: “பயிர்க் கடன்களை முழுமையாக ரத்து செய்யக் கோரி போராடியதற்காக கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை விடுவிக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக வெற்றிக் கழகம், தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதிமொழிப்படி ஐந்து ஏக்கர், அதற்கும் குறைவான நிலமுடைய விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், புதிய கடன்களை நிபந்தனையின்றி வழங்க வேண்டும், மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள சாகுபடி பாதிப்புக்கு உரிய நிவாரணமும், வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்கிட வேண்டும். டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்கு தேவையான தண்ணீரை தொடர்ந்து திறந்துவிட வேண்டும்.

உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி நீரை பெற தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு இன்று (21.10.2026) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, சங்கத்தலைவர்கள் எம்.சேகர், டி.முருகையன், டி.தியாகராஜன், நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினர் வை.செல்வராஜ் எம்.பி., திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் க.மாரிமுத்து எம்.எல்.ஏ. எஸ்.கேசவராஜ், கோ.சக்திவேல் உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் விவசாயிகள் அனைவரையும் தமிழ்நாடு அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT