தமிழகம்

சட்ட விரோத குவாரிகளை முறைப்படுத்தும் அரசாணை விரைவில் ரத்து: தமிழக அரசு

உயர் நீதிமன்றத்தில் தகவல்

கி.மகாராஜன்

மதுரை: சட்டவிரோத குவாரிகளை முறைப்படுத்தும் அரசாணை விரைவில் ரத்து செய்யப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த ஏபெல் மூர்த்தி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: சட்டவிரோதக் கல் குவாரி நடத்துபவர்கள் மீது முன்பு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜனவரியில் இயற்கை வளங்கள் துறை, ஒருமுறை மட்டுமே செயல்படுத்தப்படும் முறைப்படுத்தல் திட்டம் தொடர்பாக அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணையில், அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி கனிமங்களை வெட்டி எடுத்தால், குத்தகைக்கு அனுமதிக்கப்படாத பகுதியில் குவாரி நடத்தினால் ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.25 அபராதம் மட்டும் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் அபராதத் தொகையில் 20 சதவீதத்தை முதலில் செலுத்தலாம். மீதமுள்ள தொகையை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீதம் ஆறு தவணைகளாக (ரூ. 10 கோடிக்கு அதிகமான அபராதமாக இருந்தால் 12 தவணைகளாக) செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது சட்ட விரோத குவாரி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை பாதுகாக்கும் உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை அரசாணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசாணையை திரும்பப் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் திரும்ப பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசாணைக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீட்டிக்கப்படுகிறது. விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT