சென்னை: பார் கவுன்சிலில் இளம் வழக்கறிஞராகப் பதிவு செய்த பிறகு உயர் நீதிமன்றத்துக்கு வெளியே பட்டாசு வெடித்தும், வாளால் கேக் வெட்டி யும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய 21 பேரின் பதிவை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் ரத்து செய்துள்ளது,
கடந்த நவ.11 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலி்ல் 4,500-க்கும் மேற்பட்ட சட்டப் பட்டதாரிகள் இளம் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்யும் நிகழ்வு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடந்தது.
இந்நிகழ்வில் உச்ச நீதிமன்ற நீதிபதி மோகனாவும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிலையில் பார் கவுன்சில் பதிவு நிகழ்வு முடிந்ததும் வழக்கறிஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவரது உறவினர்களும், நண்பர்களும் உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் உள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பட்டாசு மற்றும் சரவெடிகளை வெடித்தும், வாளால் கேக் வெட்டியும், ஆளுயர மாலைகளை அணிவித்தும், பேனர்கள் வைத்தும், கோஷங்கள் எழுப்பியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனால் என்எஸ்சி போஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தன.
இதுபோல ஒவ்வொரு முறை பார் கவுன்சிலில் வழக்கறிஞர்கள் பதிவு நிகழ்ச்சி நடைபெறும் போதும் உயர் நீதி்மன்ற வளாகம் முழுவதும் குப்பை, கூளமாக மாறுவதும், இரவு நேரங்களில் துப்புரவு பணியாளர்கள் அதை அகற்றுவதும், உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களிலும் போலீஸாருடன், இளம் வழக்கறிஞர்களுடன் வருபவர்களை நீதிமன்றத்துக்குள் அனுமதிக்க மறுப்பதால் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையாக இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த நவ.11 அன்று வழக்கறிஞர் பதிவு நிகழ்வின் போது போக்குவரத்துக்கு இடையூறாக செயல்பட்ட 21 இளம் வழக்கறிஞர்களின் பதிவை தற்காலிகமாக ரத்து செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் செஞ்சி கே.கதிரவன், துணைத் தலைவர் இ.பாலமுருகன், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பி.எஸ்.அமல்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், “வழக்கறிஞர்களாக இந்த சமூகத்துக்கு தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள்பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இனி வழக்கறிஞர் பதிவு நிகழ்வுக்கு 300 பேருக்கு மேல் யாரையும் அனுமதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அல்லிக்குளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுடன் மோதலில் ஈடுபட்ட வழக்கறிஞர் பிரசன்ன வெங்கடேஷ் என்பவர் தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 4 வழக்கறிஞர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் பி.எம்.பாசில், பி.வில்லியம்ஸ் ஆகியோரது வழக்கறிஞர் பதிவு நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது” என்றனர்.