வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
சென்னை: வணிகவரித்துறை மற்றும் பத்திரப் பதிவுத்துறை செயல்பாடு கள் குறித்து அதிகாரிகளுடன் அத்துறையின் அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன், நேற்று ஆலோசனை நடத்தினார்.
தமிழக வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சராக த.லோகேஷ் தமிழ்செல்வன் பொறுப்பேற்றுள்ளார். இதேபோல், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலராக ஜெ.குமரகுருபரன் புதிதாக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலக கூட்டரங்கில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில், துறை உயர் அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.
இதில், பத்திரப்பதிவுத் துறையில், பத்திரப்பதிவு செய்ய வருவோரை அதிக நேரம் காத்திருக்க வைக்கக்கூடாது. முகூர்த்த நாட்களில் கூட்ட நெரிசல் இல்லாமல் பத்திரப்பதிவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். எந்த வகையிலும் லஞ்சம் வாங்கக்கூடாது. லஞ்சம் வாங்குவது, முறைகேடுகளில் அதிகாரிகள் ஈடுபடுவது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் வணிகவரித்துறை ஆணையர் எஸ்.நாகராஜன், பத்திரப்பதிவுத்துறை தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.