ஹவாலா பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை மண்ணடியைச் சேர்ந்த நபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி அபராதம் விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை மண்ணடி அங்கப்பநாயக்கன் தெருவைச் சேர்ந்த காதர் இப்ராமுகனி என்பவரின் மகன் லியாகத் அலி(39). இவர் கடந்த 2016-ம் ஆண்டு துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள மின்னணு சாதனங்களை சரக்கு விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலமாக இறக்குமதி செய்ததாக போலி ஆவணங்களைத் தயாரித்து கணக்கில் காட்டப்படாத ஹவாலா பணம் சுமார் ரூ. 18.66 கோடியை வெளி நாடுகளுக்கு அனுப்பியது தெரியவந்தது.
இதுகுறித்து அமலாக்கத் துறை போலீஸார் விசாரணை நடத்தி, வெளிநாட்டுக்கு விமானம் மூலம் தப்பிச் செல்ல முயன்ற லியாகத் அலியை சட்டவிரோத பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதையடுத்து இந்தியன் வங்கி சென்னை ஆயிரம் விளக்கு கிளையில் அவரது கணக்கிலிருந்த ரூ. 1.75 கோடி முடக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை, சென்னை 12-வது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அ.திருவேங்கட சீனிவாசன் முன்பாக நடந்தது. அமலாக்கத் துறை சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, “லியாகத் அலியிடம் முடக்கப்பட்ட ரூ. 1.75 கோடியை அரசுடமையாக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் திட்டமிட்டே அவர் இந்த பணமோசடியை செய்துள்ளார். எனவே அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டுள்ள லியாகத் அலி மீதான குற்றச்சாட்டு அரசு தரப்பில் சரிவர நிரூபிக்கப்பட்டுள்ளதாகக்கூறி அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் நீதிபதி தனது உத்தரவில், “இந்தியாவின் நிதி நிர்வாகம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லாமைக்கு பணமோசடி முக்கிய காரணியாக விளங்குகிறது. அதை தடுப்பது நீதித்துறை மற்றும் அரசாங்கத்தின் கடமை. பணம் தீயது அல்ல, ஆனால் தீய எண்ணங்களுக்கு மூல காரணம் என தேசப்பிதா காந்தியடிகள் கூறியுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.