சென்னை: நீதித் துறையில் காலத்துக்கேற்ப சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசியலமைப்பு தின கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதனை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து பேசியது:
மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு, காலப்போக்கில் சிலரது கைவசம் சென்றுவிட்டது. அது மீண்டும் தனது உரிமையாளர்களான மக்களிடம் செல்ல வேண்டும். அதற்காகவே இந்த ஆண்டு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சாமானிய மக்களின் வாழ்வில் அரசியலமைப்பு எவ்வாறு பங்கு வகிக்கிறது என்று பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று கூறவேண்டும். அரசியலமைப்பு ரகசியமாகவோ, சிக்கலான சட்ட ஆவணமாகவோ இருக்கக்கூடாது.இளைஞர்களிடம் அதை எளிமையாக எடுத்துச் செல்ல வேண்டும்.
அரசியலமைப்பு கொடுத்த வாக்குறுதிகளை நீதித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் காக்க வேண்டும். நீதியை அணுகும் உரிமை ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்க வேண்டும் என்கிறது அரசியலமைப்பு. ஆனால், ‘நீதியைப் பெறுவதற்கான செலவு தற்போது உயர்ந்து விட்டது. வழக்குகளைக் கையாள்வது பணக்காரர்களின் விஷயமாகிவிட்டது’ என்ற எண்ணம் சிலருக்கு உள்ளது. பலருக்கு நீதி கிடைக்காமல் உள்ளது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். நீதி என்பது சந்தைப் பொருள் அல்ல. அது அனைவருக்கும் கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காததால் சிறைச்சாலைகள் ஏழைகளால் நிரம்பியுள்ளன. பணக்கார குற்றவாளிகள் புத்திசாலி வழக்கறிஞர் வைத்து தப்புகின்றனர்.
கொலை போன்ற பெரிய குற்றங்களில் தண்டனை விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. நீண்டகால விசாரணைகள் நீதியை தாமதப்படுத்துகின்றன. தாமதமே நீதியை மறுக்கும் நிலையை உருவாக்குகிறது. நீதிமன்றங்கள் மக்களுக்கு அச்சமூட்டும் இடமாக இருக்கக் கூடாது. 75 ஆண்டுகள் ஆனபிறகும் இன்னும் மக்களுக்கு புரியும் மொழியில் பேச முடியவில்லை. இந்த நிலை மாற வேண்டும். வழக்குகளுக்கான செலவுகள் குறைய வேண்டும்.
நமது அரசியலமைப்பை புரிந்து கொள்ள வெளிநாட்டு நீதிமன்ற தீர்ப்புகளை நாட அவசியம் இல்லை. நமது நாகரிகம் 5,000 ஆண்டுகள் பழமையானது. நமக்கே சரியான நீதிக் கொள்
கைகள் உள்ளன. அரசியல், அறிவியல், ராணுவம் என எல்லாத்துறைகளிலும் தன்னிறைவு அடைந்த நாம், நீதித்துறையில் ஏன் தன்னிறைவு அடைய முடியாது, நாம் சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். நாம் உருவாக்கிய அமைப்புகள் சில நேரங்களில் தவறான நடைமுறைகளுக்கு ஊக்கமளிக்கின்றன. எனவே, நீதித் துறையை சீர்திருத்தி அது சுதந்திரமாக இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
நிகழ்வில் முன்னாள் நீதிபதி வி.பாரதிதாசன், பல்கலைக்கழக பதிவாளர் கவுரி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.