தமிழகம்

“தமிழகத்தில் கிராவல் மண் எடுக்க அடுத்த வாரம் சீர்திருத்தம்” - அமைச்சர் டி.கே.பிரபு தகவல்

இ.ஜெகநாதன்

சிவகங்கை: “தமிழகத்தில் கிராவல் மண் எடுப்பதற்கு சில சீர்திருத்தங்களை அடுத்த வாரம் கொண்டு வருகிறோம்” என கனிம வளத் துறை அமைச்சர் டி.கே.பிரபு தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் டி.கே. பிரபு ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் டி.கே.பிரபு பேசும்போது, “அதிகாரிகள் தங்களது பதவி, அதிகாரத்தை மறந்துவிட்டு, மக்களின் குறைகளை, பிரச்சினைகளை காது கொடுத்து கேட்க வேண்டும்.

அந்தப் பிரச்சினைகள் மீது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நேர்மையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அதைத்தான் பதவியேற்றதிலிருந்து முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு செய்து வருகிறது. மக்களுக்கான ஆட்சியாக உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்பர் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “கனிமங்கள் வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதற்குத் தடை என்ற மக்களிடம் வரவேற்பை பெற்ற வரலாற்று சிறப்புமிக்க முடிவை முதல்வர் விஜய் எடுத்துள்ளார். மக்களின் விருப்பத்தை தொடர்ந்து அவர் நிறைவேற்றுவார். சிவகங்கை கிராபைட் தொழிற்சாலையில் தேங்கியுள்ள பல ஆயிரம் டன் கிராபைட்டை விற்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

தமிழகம் முழுவதும் கிராவல் மண் எடுப்பதற்கு சில சீர்திருத்தங்களை அடுத்த வாரம் கொண்டு வருகிறோம். மண்பாண்டத் தொழிலாளர்கள் மண் அள்ளுவதில் உள்ள இடையூறுகளும் சரிசெய்யப்படும். முதல்வரின் ஊழலற்ற ஆட்சியை அதிகாரிகள் ஒத்துழைப்போடு சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளேன்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT