சென்னை: சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான ஒருநாள் ஊதியத்தை ரூ. 832-ல் இருந்து ரூ.762 ஆக குறைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
இதுதொடர்பாக உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் கு.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 24 ஆயிரம் தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் வரை தினக்கூலியாக ரூ. 832 நிர்ணயம் செய்து மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்தார்.
ஆனால் திடீரென இந்தக் கூலியை ரூ.762 ஆக குறைத்து கடந்த அக்.5-ம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தூய்மைப் பணியாளர்கள் தினமும் ரூ. 70 வீதம் மாதத்துக்கு ரூ. 2100-ஐ இழக்க நேரிடும்.
எனவே தினக்கூலி ஊதியத்தை ரூ. 832-ல் இருந்து ரூ. 762 ஆக குறைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
மீண்டும் பழைய ஊதி யத்தையே வழங்கவும், பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை வழங்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பி்ல் வழக்கறிஞர் எஸ். குமாரசாமி ஆஜராகி வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 2-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.