திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை விட குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு, ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என மதிமுக மாவட்டச் செயலாளர் ஒருவர் முகநூலில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மதிமுகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும், 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் சொந்த சின்னத்திலும் போட்டியிட உள்ளது. கடந்த முறையை விட 2 தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக மதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தனது முகநூல் பக்கத்தில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை பட்டியலிட்டு, ‘நெஞ்சு பொறுக்குதில்லையே...’ எனக் குறிப்பிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “தொகுதிப் பங்கீடு பட்டியல் வரிசையில் மதிமுக பின்தங்கியிருப்பதை பார்த்து ஏற்பட்ட உணர்ச்சி குமுறல் பதிவு. இதற்காக நாங்கள் தேர்தல் பணியில் பின்தங்க மாட்டோம். கட்சித் தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, தோழமைக் கட்சிகளின் வெற்றிக்கு பாடுபடுவோம்” என்றார்.
அவரது முகநூல் பதிவுக்கு, “இதற்கு தேர்தல் புறக்கணிப்பே மேல்; நம்மை அழிக்கும் ஒரே இயக்கம் திமுக; பதவி ஆசை பிடித்த இரண்டாம் கட்ட தலைகள் மட்டுமே இந்த நிலைக்கு காரணம்; கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும்” என பலரும் பின்னூட்டத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.