சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் உள்ள கழிவறைகளின் சுகாதார சீர்கேட்டை சரிசெய்யக் கோரிய வழக்கில், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர், பொதுப் பணித்துறையின் தலைமை செயற் பொறியாளர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.சிவசுப்ரமணியம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் உள்ள கழிவறைகளும் உரிய சுகாதார வசதிகளின்றி, பொது கழிவறைகளை விட மோசமான நிலையில் உள்ளதாகவும், இந்த கழிவறைகளில் உள்ள குழாய்கள் உள்ளிட்ட சாதனங்கள் உடைந்த நிலையிலும், காற்றோட வசதிகளின்றி, துர்நாற்றம் வீசுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால், வழக்கறிஞர்கள், வழக்காடிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றங்களில் உள்ள கழிவறைகளில் நிலவும் இந்த சுகாதார சீர்கேட்டால், டெங்கு, மலேரியா உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், நீதிமன்றங்களில் உள்ள கழிவறைகளை சரி செய்து, துர்நாற்றத்தைப் போக்கும் வகையில் அவற்றை சுத்தமாக பராமரிக்க நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, இந்த கழிவறைகளை பயன்படுத்துவது யார்? அவற்றை சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவர்கள் கடமை எனக் கூறி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர், பொதுப் பணித் துறையின் முதன்மை செயற் பொறியாளருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.