உயர் நீதிமன்றம்
சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்கப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் கட்டாயம் ரசீது வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செம்பியத்தைச் சேர்ந்த ஜி. தேவராஜன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது: சென்னையில் பெரம்பூர், கொளத்தூர், மாதவரம், செம்பியம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. எங்குமே ரசீது வழங்கப்படுவதில்லை.
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதன் மூலம் கோடிக்கணக்கில், கணக்கில் காட்டப்படாத பணம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டத்தில் கைமாறி வருவதால், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில், “மனுதாரர் சுட்டிக் காட்டிய மதுபானக் கடைகளில் 5 கடைகள் மூடப்பட்டு விட்டன” எனக் கூறி, எஞ்சிய கடைகளுக்கான இருப்பு, விற்பனை பதிவேடு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, “எந்த டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் ரசீது புத்தகங்கள் பராமரிக்கப்படவில்லை. வாடிக்கையாளர்களுக்கும் ரசீதுகள் வழங்கப்படவில்லை. எனவே தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்கப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். ரசீது புத்தகங்களையும் முறையாகப் பராமரிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கக்கூடாது என ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.
ஒருவேளை கூடுதல் விலைக்கு விற்றால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் நாளை (ஆக.7) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.