மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விஐபிக்கள் வருகையின்போது மின் தடை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து மின்வாரியம், கோயில் நிர்வாகத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முக்கிய விஐபிக்கள் வருகையின்போது மின்தடை ஏற்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. அக். 29-ம் தேதி மாலை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தரிசனம் செய்தபோது மின்தடை ஏற்பட்டது.
அதேபோல், நேற்று முன்தினம் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தரிசனத்தை முடித்துவிட்டு கோயில் முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது 2 முறை மின்தடை ஏற்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்த நாட்களில் மின்தடை ஏற்பட்டதால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளிக்கும் நிலை ஏற்பட்டது.
விஐபிக்களின் வருகையின்போது மின்தடை ஏற்பட்டது குறித்து பக்தர்களிடையே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து மின்வாரியத் துறையினர் கூறுகையில், கோயில் அருகே 350 கேவிஏ கிலோ உயர் அழுத்தமுடைய துணை மின் நிலையம் உள்ளது.
கோயிலுக்கென தனியாக 11 கேவி மின் பாதை கொடுத்துள்ளோம். கோயிலைச் சுற்றியுள்ள பகுதிக்கு 3 மின் பாதைகள் உள்ளன. குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர், ஆளுநர்கள் உள்ளிட்ட முக்கிய விஐபிக்கள் வருகையின்போது கோயிலில் மின்தடை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கும் நடைமுறை உள்ளது.
இரண்டாம்பட்சமாகத்தான் மின்வாரிய மின்சாரத்தை வைத்திருப்பார்கள். குடியரசு துணைத் தலைவர் வருகைக்காக அக். 29-ம் தேதி மாலை ஒத்திகை பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வருகை தந்தது தெரியாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் மின்வெட்டு ஏற்பட்டது. இதற்கும் மின் வாரியத்துக்கும் சம்பந்தமில்லை, கோயில் நிர்வாகம்தான் பொறுப்பு என்று கூறினர்.
இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், கோயிலில் 125 கேவி ஜெனரேட்டர் 2 உள்ளன. புதிதாக ஒரு ஜெனரேட்டர் வாங்க உள்ளோம். மின்சார பிரிவுக்கென ஒரு உதவி செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் 4 உதவியாளர்கள் உள்ளனர். குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி அக்.29-ம் தேதி ஒத்திகைப் பணியில் ஈடுபட்டபோது மின்வெட்டு ஏற்பட்டது.
அப்போது முன்னாள் முதல்வர் பழனிசாமி வந்திருந்தது தெரியவில்லை. அடுத்த நாள் குடியரசு துணைத் தலைவர் தரிசனம் செய்துவிட்டு வெளியே சென்றுவிட்டார் என நினைத்து, ஜெனரேட்டரில் இருந்து வழக்கமான மின்சாரத்துக்கு மாற்றும்போது ஒரு நிமிடம் மின்வெட்டு ஏற்பட்டது.
ஆனால், செய்தியாளர்களை சந்தித்து அவர் பேட்டி கொடுத்தார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. தெரிந்திருந்தால் அவர் பேட்டி கொடுத்துவிட்டு சென்ற பின்பு மின் இணைப்பை மாற்றிக் கொடுத்திருப்போம். இதுதான் உண்மை நிலைமை என்று கூறினர்