12,000 பேர் உறுப்பினர்களாக உள்ள தேன்கனிக்கோட்டை கிளை நூலகத்தில் 6 இருக்கைகள் மட்டுமே உள்ள வாசகர்கள் அமரும் பகுதி.
ஓசூர்: தேன்கனிக்கோட்டை கிளை நூலகத்தில் தீண்டாமை கொடுமை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூருக்கு அடுத்து வளர்ச்சி பெறும் நகரமாக தேன்கனிக் கோட்டை இருந்து வருகிறது.
இங்குள்ள பஞ்சப்பள்ளி சாலையில் அரசு கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. நூலகத்திற்கு தேன்கனிக்கோட்டை மற்றும் அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் அரசு போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்கள் வந்து செல்கின்றனர்.
நூலகத்தில் வாசகர்கள் அமர்ந்து படிக்க போதிய இடம் வசதி இல்லை. இதனால், நாளுக்கு நாள் வாசகர்கள் வருகை குறைந்து வருகிறது. இதற்கிடையில், வாசகர்களிடையே தீண்டாமை கொடுமை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக வாசகர்கள் சிலர் கூறியதாவது: தேன்கனிக்கோட்டை நூலகத்துக்கு இளைஞர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு வாசகர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய இட வசதி இல்லை. 6 இருக்கைகள் மட்டுமே உள்ளன.
இதனால், போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். மாலை நேரத்தில் நூலகத்துக்கு வரும் சிலர் இளைஞர்களிடம் அவர்களின் குலத்தொழிலைக் குறிப்பிட்டு நீங்கள் எல்லாம் இங்கு வந்து சரிசமமாக அமர்ந்து படிக்கக் கூடாது எனக்கூறி சாதி பெயரை குறிப்பிடுகின்றனர்.
அண்மையில் இது தொடர்பாக வாசகர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இப்பிரச்சினையால் பலர் நூலகத்திற்கு வர அச்சப் பட்டுத் தவிர்த்து வருகின்றனர். அறிவுத் தேடலுக்குரிய பொது நூலகத்திலேயே இக்கொடுமை நடப்பது வேதனையாக உள்ளது.
எனவே, நூலகத்தில் நடக்கும் தீண்டாமை கொடுமையை களையவும், நூலகத்தை விரிவாக்கம் செய்யவும் மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடவடிக்கை எடுப்பதாக நூலகர் உறுதி தீண்டாமை குற்றச்சாட்டு குறித்து கிளை நூலகரிடம் கேட்டபோது கூறியதாவது: நூலகத்தில் 39,000 புத்தகங்கள் உள்ளன. இங்கு 12,000 உறுப்பினர்கள் உள்ளனர். வாசகர்கள் அமர்ந்து படிக்க போதிய இடம் இல்லாததால் கூடுதல் கட்டிடம் கட்ட மாவட்ட நூலகருக்கு பரிந்துரைத்துள்ளோம்.
போட்டித் தேர்வு எழுது வோர் அமர்ந்து படிக்க நன்கொடையாளர்கள் தற்காலிக செட் அமைத்துக் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். நூலகத்திற்கு மாலை நேரத்தில் ஒருவர் வருவார். வழக்கமாக அவர் அமரும் இடத்தில் வேறு யாரும் அமர்ந்து படிக்கக் கூடாது எனக் கூறுவதோடு யாராவது அமர்ந்திருந்தால், அவர்களை விரட்டிவிடுவார்.
தீண்டாமை குற்றச்சாட்டு குறித்து தற்போது தான் தகவல் வந்துள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதை பெரிதுபடுத்த வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.