ஆர்.பி.உதயகுமார்

 
தமிழகம்

“ஜல்லிக்கட்டு விழாவை திமுகவின் குடும்ப விழாவாக மாற்றுவதா?” - ஆர்.பி. உதயகுமார் காட்டம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ‘‘பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை மரபுபடி காலை 7 மணிக்கு தெடாங்காமல் துணை முதல்வர் உதயநிதிக்காக ஒன்றரை மணி நேரம் தாமதப்படுத்தி, போட்டியை காண வந்த மக்களையும், போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள், காளைகள், அதன் உரிமையாளர்களை வேதனைப்படுத்தலாமா? என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில் பொதுமக்கள் பங்கேற்கும் பொங்கல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. சோழவந்தான் தொகுதி தனிச்சியத்தின் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இதற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம் தலைமை தாங்கினார்.

ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல மீண்டும் தமிழகத்தில் பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்று அம்மா பேரவை சார்பில் தொடர்ந்து மூன்று நாட்களில் மூன்று தொகுதிகளில் ‘எடப்பாடியார் பொங்கல்’ நடைபெற்று வருகிறது. உலகப் பிரசித்தி பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஜல்லிக்கட்டு போட்டிகள் மன்னராட்சி முதல் தற்போது மக்களாட்சி வரை மக்கள் ஜல்லிக்கட்டாக நடைபெற்று வந்தது.

ஆனால் தற்போது துணை முதல்வர் உதயநிதிக்காகவும், முதல்வர் ஸ்டாலினுக்காக ஜல்லிக்கட்டு நடத்துவது போல் ஆகிவிட்டது. இன்று பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிகாலையில் இருந்து மாடுபிடி வீரர்களும், காளைகளும், பார்வையாளர்களும் தமிழகம் முழுவதும் வந்திருந்து காத்திருந்தனர். ஆனால், போட்டி திட்டமிட்டப்படியும், மரபுபடியும் காலை 7 மணி முதல் 8 மணிக்குள் தொடங்கப்பட வேண்டும்.

இப்படிதான் காலம் காலமாக இந்த நேரங்களில் போட்டிகள் தொடங்கப்பட்டது. ஆனால், பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று மரபுபடி 7 மணி முதல் 8 மணி வரை தொடங்கப்படப்படவில்லை. 9.30 மணி தாண்டியும் தொடங்கப்படாமல் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளைகளை வேதனைக்குள்ளாக்கின்றனர்.

உதயநிதிக்காக வேடிக்கை ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துகிறார்கள். திமுக அரசின் அதிகார துஷ்பிரேகம் எல்லை மீறிச் சென்று விட்டது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால், முதல்வர், துணை முதல்வர், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவில் அறிவிப்பார்களா என்று மக்களிடத்தில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

முதல் முதலாக ஜல்லிக்கட்டு போட்டியில் உலக கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு காரை பரிசளித்தது அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த பழனிசாமிதான். அதேபோல ஜல்லிக்கட்டு உரிமையை பாதுகாத்து மீண்டும் மீட்டுத் தந்ததும் அதிமுக ஆட்சியில்தான். ஜல்லிக்கட்டுக்காக எந்த ஒரு முயற்சியும் செய்யாத இந்த அரசு வீட்டு உரிமையைப் போல ஜல்லிக்கட்டு விழாவை மாற்றலாமா? ஜல்லிக்கட்டு விழா என்பது நாட்டின் சொத்து.

அதை வீட்டின் சொத்தாக்க முயற்சிக்கலாமா? ஜல்லிக்கட்டு விழாவை திமுகவின் குடும்ப விழாவாக மாற்றலாமா? இனி எத்தனை நாட்களுக்குத்தான் மக்கள் பொறுத்திருப்பார்கள்? ஜல்லிக்கட்டு வாடிவாசலை இளவரசர், மன்னர் வரும் வரை காத்திருந்து திறக்கிறார்கள். மீண்டும் பழனிசாமி ஆட்சிக்கு வருவார். அப்போது மக்கள் விரும்பும் கிராம கமிட்டியை முன்னிறுத்தி ஜல்லிக்கட்டு விழா அகிலம் போற்றும் வகையில் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT