முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் | கோப்புப் படம்

 
தமிழகம்

“விஜய் நடத்தும் ஜனநாயக படுகொலைக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்” - ஆர்.பி உதயகுமார்

என்.சன்னாசி

மதுரை: “மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட 39 இடங்களில் முதல்வர் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருப்பது அவர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை வீழ்ச்சியையே காட்டுகிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மதுரையில் இன்று கூறியதாவது, “மதுராந்தகத்தில் 39 இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்வார் என்பதும், இதற்காக 10 பொறுப்பு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் கடந்த நான்கு மாத கால ஆட்சியில் அவரது வசீகரம் வீழ்ச்சி அடைந்து வருவதையே காட்டுகிறது.

தவெக தேர்தல் விதிகளை மீறி வருகிறது. கோடிக் கணக்கில் பணம் செலவு செய்து பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ ஆகியவற்றை அக்கட்சி நடத்துகிறது.

வாழ்க்கை ஒரு வட்டம். மேலே இருப்பவர் கீழே வருவதும் கீழே இருப்பவர்கள் மேலே வருவதும் இயற்கை நியதி. மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து செப்டம்பர் 25-ம் தேதி முதல்வர் விஜய் முதல் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக இன்றைக்கு மதுராந்தகம் தொகுதியில் வாகனத்தில் இருந்தபடியே 39 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். இதற்கு ஒட்டுமொத்த தவெக பொறுப்பாளர்கள் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

கொளத்தூர் தொகுதியில் 5 நிமிட பிரச்சாரத்தில் முன்னாள் முதல்வர் தோற்கடித்து கொத்து புரோட்டா போட்டோம் என சட்டமன்றத்தில் வீராப்பு பேசிய விஜய், இன்றைக்கு முதல்வரான பிறகு அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து அதற்காக குதிரை பேரத்தை நடத்தி, பதவி ஆசை காட்டி அவர் அரங்கேற்றி வருகின்ற ஜனநாயக படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த இரண்டு தொகுதிகளில் மக்கள் தீர்ப்பளிக்க உள்ளார்கள்.

கடந்த நான்கு மாத காலம் தவெக ஆட்சியில் மின்சார வெட்டு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, லாக்கப் மரணங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், விலைவாசி உயர்வு என இவை எல்லாம் விஜயின் ஆளுமையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

ஒட்டுமொத்தமாக விஜய்யின் வசிகரம் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது, தவெக தோல்வி முகத்தில் உள்ளது‌. தாராபுரம், மதுராந்தகம் தொகுதி மக்கள் வழங்கும் தீர்ப்பு தான் இனி கட்சி மாறுகின்ற கலாச்சாரத்திற்கு முடிவுரை எழுதுகிற தீர்ப்பாக இருக்கும். வசீகரத்தால் எதை வேண்டுமானாலும் வளைத்து விட விடலாம் என நினைக்கும் விஜய்க்கு இந்த இரண்டு தொகுதிகளிலும் ஏமாற்றம் தான் கிடைக்கும்.” என்று ஆர்பி உதயகுமார் கூறினார்.

SCROLL FOR NEXT