மதுரை: அதிமுக ஆட்சியில் ரூ.5-க்கு வாங்கிய 1 யூனிட் மின்சாரத்தை, தற்போது தவெக அரசு ரூ.35-க்கு வாங்குகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது: “தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 4 மாதங்களில் மட்டும் அரிசி விலை 30 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்து விட்டது. துவரம் பருப்பு ரூ.110-லிருந்து ரூ.150-க்கு விற்கப்படுகிறது. பூண்டு விலை ரூ.250 என அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.
மொத்தத்தில், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வில் முதலிடத்தில் உள்ளது. பல்வேறு மாநிலங்களில் சென்று தன்னை விளம்பரப்படுத்தி கொள்ள அக்கறை செலுத்தும் முதல்வர், தனது மாநில பிரச்சினைகளுக்கு வாய் திறக்க முன்வருவாரா?
அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.75 முதல் ரூ.5.48 மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் ரூ.11.50 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தற்பொழுது தவெக ஆட்சியில் ரூ.35-க்கு ஒரு யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதை நியாயப்படுத்தி பேசி வருகின்றனர். தற்போது இந்த பிரச்சினைக்கு மத்திய அரசு மீது தவெக அரசு பழி போட்டு தப்பிக்க முயற்சிக்கிறது. இதற்கு உரிய தீர்வை அரசு காணவில்லை.
இந்த 4 மாதங்களில் விலைவாசி உயர்விலும், மின்சார பிரச்சினையிலும் தவெக அரசு தங்கப் பதக்கம் வாங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் கொள்முதல் எப்படி செய்யப்பட்டது, விலைவாசி எப்படி இருந்தது என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். நிச்சயம் வரும் காலங்களில் அதிமுகவுக்கு களம் சாதகமாக இருக்கும் மீண்டும் முதல்வராக பழனிசாமி வெற்றிவாகை சூடுவார்” என்று அவர் கூறினார்.