புதுச்சேரியில் புதிதாக தேர்வான என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக ரங்கசாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அமைச்சர்கள் யார் யார் என்பதை ரங்கசாமி விரைவில் முடிவு செய்ய உள்ளார்.
புதுச்சேரியில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என 4 பிராந்தியங்கள் உள்ளன. இதற்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப். 9-ம் தேதி நடைபெற்றது. இங்கு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
என்டிஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, புதிதாக உருவான லட்சிய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் - திமுக இடையே ஏற்பட்ட மோதலால் தொடக்கம் முதலே பெரும் குழப்பம் ஏற்பட்டு, தேர்தலை சந்தித்தது. திமுக போட்டியிட்ட 5 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டனர். அத்துடன் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிட்டனர். விசிகவுக்கு ஒதுக்கிய தொகுதியில் காங்கிரஸ், இடதுசாரிகள் போட்டியிட்டன.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் கடந்த 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், என்டிஏ கூட்டணி 18 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கிறது. இக்கூட்டணிக்கு தலைமையேற்றிருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 4 தொகுதிகளை வென்றுள்ளது.
அதிமுக, லட்சிய ஜனநாயகக் கட்சி முறையே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. தேர்தல் முடிவு வந்ததைத் தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸில் வெற்றி பெற்ற அனைவரும், முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான ரங்கசாமியை சந்தித்து ஆசி பெற்றனர்.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் காமராஜர் சாலையில் உள்ள ஓட்டலில் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் ரங்கசாமி தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் முதல்வர் ரங்கசாமியை பேரவை கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்தனர். இதற்கான கடிதத்தில் எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டனர்.
என்டிஏ கூட்டணியில் தொடர்வதாக முதல்வர் ரங்கசாமி ஏற்கெனவே அறிவித்துள்ளார். மேலும் புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவி யாருக்கு, கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர்கள் என்பதை முதல்வர் ரங்கசாமி முடிவு செய்ய இருக்கிறார்.