தமிழகம்

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க அனுமதி கோரி ஆளுநரிடம் கடிதம்: 13-ம் தேதி முதல்வராக ரங்கசாமி பதவியேற்கிறார்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் தலை​வ​ராக ரங்​க​சாமி தேர்வு செய்​யப்​பட்​டார். இதையடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்தார். வரும் 13-ம் தேதி முதல்​வ​ராக அவர் பதவி​யேற்​கிறார்.

புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி 18 தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்​ளது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றுள்ள என்​ஆர்​.​காங்​கிரஸ் 12, பாஜக 4, அதி​முக, லஜக முறையே ஒரு இடத்​தில் வெற்றி பெற்​றுள்​ளன.

புதுச்​சேரி​யில் உள்ள 30 எம்​எல்​ஏக்​களில் ஆட்சி அமைக்க 16 எம்​எல்​ஏக்​களின் ஆதரவு தேவை. அதேநேரம் தற்போது தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு 18 எம்​எல்​ஏக்​கள் பலம் உள்​ள​தால் மீண்​டும் ரங்​க​சாமி தலை​மை​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமைய உள்​ளது.

ஏற்​கெனவே கடந்த 3 நாட்​களுக்கு முன் என்​ஆர்​.​காங்​கிரஸ் கட்​சி​யின் சட்​டப்​பேரவை கட்​சித்​தலை​வ​ராக ரங்​க​சாமி தேர்வு செய்​யப்​பட்​டார். அதே போல் பாஜக​வின் சட்​டப்​பேர​வைக் கட்​சித்​ தலை​வ​ராக நமச்​சி​வா​யம் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார்.

என்​டிஏ கூட்​டணி அமைச்​சர​வை​யில் பாஜவுக்கு எத்​தனை அமைச்​சர்​கள் என்ற முதல்​கட்ட பேச்​சு​வார்த்தை நடந்​தது. இதில் எந்த முடி​வும் எட்​ட​ப்படவில்​லை. அதைத்​தொடர்ந்​து, புதிய ஆட்சி அமைய முதல்​வர் பதவியை ரங்​க​சாமி தனது பதவியை ராஜி​னாமா செய்​து, துணைநிலை ஆளுநர் கைலாஷ்​நாதனிடம் நேற்று முன்​தினம் கடிதம் அளித்​தார்.

இதைத்​தொடர்ந்து நேற்று நடந்த ஆலோ​சனைக் கூட்​டத்​தில், பாஜக மேலிடப் பொறுப்​பாளர் மன்​சுக் மாண்​ட​வி​யா, ரங்​க​சாமி, பேர​வை​யின் பாஜக தலை​வர் நமச்​சி​வா​யம், அதி​முக மாநிலச் செய​லா​ளர் அன்​பழகன், லட்​சிய ஜனநாயக கட்​சித் தலை​வர் ஜோஸ் சார்​லஸ் மார்ட்​டின் மற்​றும் என்​டிஏ கூட்​டணி எம்​எல்​ஏக்​கள் பங்​கேற்​றனர்.

இதில் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் தலை​வ​ராக ரங்​க​சாமி ஒரு​மன​தாக தேர்வு செய்​யப்​பட்​டார். ரங்​க​சாமி ஆட்சி அமைக்க பாஜக, அதி​முக, லஜக கட்​சிகள் ஆதர​வுக் கடிதங்​களை வழங்​கின. கூட்​டத்​துக்கு பின் ரங்​க​சாமி கூறும்​போது, "ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்​திக்​க​வுள்​ளேன்.

அதன்​பிறகு பதவி​யேற்பு விழா தேதி பற்றி முடிவு செய்​யப்​படும். அமைச்​சர்​கள் பதவி யார் யாருக்​கு, எந்​தக் கட்​சி​யினருக்கு என்​பது பதவி தரும்​போது தெரி​யும். பேர​வைத் தலை​வர் யார் என்​ப​தை​யும் பிறகு தெரிவிக்​கிறேன்" என்​றார்.

என்​டிஏ எம்​எல்​ஏக்​கள் தரப்​பில் விசா​ரித்​த​போது, “வரும் 13-ம் தேதி ஆளுநர் மாளி​கை​யில் நடை​பெறும் விழா​வில் முதல்​வர் ரங்​க​சாமி பதவி​யேற்க முடிவு எடுத்​துள்​ளார்” என்று தெரி​வித்​தனர். இதுதொடர்​பான முறை​யான அறி​விப்பு விரை​வில் வெளி​யாகும் என்று தெரி​வித்திருந்தனர்.

பாஜக அழுத்​தம்

மேலும் கட்சி வட்​டாரங்​களில் விசா​ரித்​த​போது, மத்​திய அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வி​யா​வும் ரங்​க​சாமி​யும் தனி​யாக பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது கடந்த முறையை போல பேர​வைத் தலை​வர், இரு அமைச்​சர்​கள் பதவி​களை தங்​களுக்கு வழங்​கும்​படி பாஜக தரப்​பில் வலி​யுறுத்​தப்​பட்​ட​தாக தெரிவிக்​கப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை தேசிய ஜனநாயக ​கூட்​டணி ஆட்சி அமைக்க உரிமைக்​கோரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்​நாதனிடம் முதல்​வர் ரங்​க​சாமி கடிதம் அளித்​தார். என்​.ஆர்​.​காங்​கிரஸ், பாஜக, அதி​முக, லஜக எம்​எல்​ஏக்​கள் அப்போது உடனிருந்​தனர்.

இச்​சந்​திப்​புக்கு பிறகு முதல்​வர் ரங்​க​சாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “புதுச்​சேரி​யில் என்​டிஏ ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்​கக்​கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்​துள்​ளேன்​. வரும் 13-ம் தேதி காலை முதல்​வ​ராக பதவி ஏற்​கிறேன்” என்​றார்.

தொடர்ந்து பாஜக மாநிலத்​தலை​வர் வி.பி.​ராமலிங்​கம் கூறுகையில்,“ஏற்​கெனவே கடந்த என்​டிஏ கூட்​ட​ணி​யில் இருந்​தது போல் புதி​தாக அமை​யும் தேசிய ஜனநாயக ​கூட்​டணி அரசில் பாஜக​வுக்கு பேர​வைத்​தலை​வர், இரு அமைச்​சர்​கள் தர கோரி​யிருந்​தோம்​.பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு ஏற்​பட்​டுள்​ளது” என்​றார்.

இதைத் தொடர்ந்​து, துணைநிலை ஆளுநர் மாளிகை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், “புதுச்​சேரி​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி தலை​வ​ராக தேர்வு செய்​யப்​பட்​டுள்ள, என்​.ஆர்​.​காங்​கிரஸ் தலை​வர் ரங்​க​சாமி ஆளுநர் கைலாஷ்​நாதனை சந்​தித்​தார்.

அப்​போது புதுச்​சேரி​யில் ஆட்சி அமைக்க உரிமை கோரி எம்​எல்​ஏக்​களின் ஆதரவு கடிதத்தை அளித்​தார். கடிதம் குடியரசுத்​ தலை​வர் ஒப்​புதலுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT