சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்க ஏதுவாக சாய்வுதள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்.23 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடிகளில் சாய்வுதள நடைபாதை உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுக்கக்கோரி மாற்றுத் திறனாளியான வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், “தேர்தலின்போது மாற்றுத் திறனாளிகளுக்கான சட்ட விதிகளை அமல்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரிகளான அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வுதள வசதியை ஏற்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக முழுமையான விவரங்களுடன் மனுத் தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகள் வாக்குச்சாவடிகளை எளிதில் அணுகும் வகையில் அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.