ராமேசுவரம்: ராமேசுவரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக இலங்கை நாடாளுமன்றத்தில் துறைமுகங்கள் துறை அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் கூறியதாவது: இலங்கை - இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவையை தொடங்குவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை 2011-ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டது.
இது தொடர்பாக இரு நாடுகளிடையே கலந்துரையாடுவதற்கு கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின்செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தலைமன்னார், மன்னார் மற்றும் இந்தியாவின் ராமேசுவவரம் இடையே பயணிகள் கப்பல் சேவையை தொடங்குவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
ஆய்வு அறிக்கையில் கப்பல் சேவையை தொடங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டால், அதற்கான பணிகள் தொடங்கப்படும். இந்த கப்பல் சேவை மூலம் இலங்கையின் வடக்கு மாகாண மக்களுக்கு புதிய தொழில்வாய்ப்புகள் ஏற்படும். முதலீட்டு வாய்ப்புகளும் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.