இரு மாதங்களுக்குப் பிறகு பரபரப்பாக காணப்பட்ட ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம்.
ராமேசுவரம்: மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் அதிக மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் ஜுன் 14 அன்றுடன் முடிவடைந்த நிலையில் விசைப்படகு மீனவர்கள் தற்போது கடலுக்குச் சென்று வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை மாலையிலிருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் சுமார் 3,500 மீனவர்கள் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்றனர்.
இப்படகுகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்துக்கு திரும்பத் தொடங்கின. ராமேசுவரத்தில் நேற்று மட்டும் விசைப்படகு மீனவர்களுக்கு சுமார் 2 லட்சம் கிலோ இறால் மீன், கணவாய், நண்டு ஆகிய ஏற்றுமதி மீன்களும், செறையா, பாறை, திருக்கை உள்ளிட்ட இதர மீன்கள் சுமார் 3 லட்சம் கிலோ வரையிலும் கிடைத்துள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.10 கோடிக்கும் மேல் ஆகும்.
வழக்கமாக முதல் தரமான இறால் ஒரு கிலோ இறால் ரூ.500-க்கு மேல் விலை போகும். ஆனால் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து முதல் நாள் மீனவர்கள் கரை திரும்பியதில் அதிகளவில் இறால் சிக்கியதால் வியாபாரிகள் இறால்களை விலை நிர்ணயம் செய்யாமல் கொள்முதல் செய்தனர். மேலும், மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களுக்கு அதிக மீன்கள் கிடைத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் மீன்பிடித் தடைக்காலம் முடிவதற்கு முன்னதாக டோக்கன் இன்றி கடலுக்குச் சென்ற விசைப் படகுகளுக்கு டீசல் மானியம் ரத்து செய்வது தொடர்பாக மீன்வளத் துறையினர் ஆலோ சனை செய்து வருகின்றனர்.