ராமேசுவரம் மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கும் அலுவலகம் எதிரே நடைபெற்ற மீனவர்களின் ஆர்ப்பாட்டம்.

 
தமிழகம்

ஃபைபர் படகுகளுக்கு மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ஃபைபர் படகுகளுக்கு மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கக் கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம் பாக் நீரிணை கடல் பகுதியில் இலங்கைக்கு மிக அருகில் கடல் எல்லை மிக குறுகிய கடற்பரப்புக்குள் உள்ளது. ஃபைபர் படகுகள் அதிவேகம் கொண்டவை என்பதால், அவை மிக விரைவாக சர்வதேச எல்லையைத் தாண்டிச் செல்ல வாய்ப்புள்ளது. இதனால் இலங்கை கடற்படையினரின் கைது சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும் என்பதாலும் பல்வேறு பாதுகாப்பு கருதியும் ராமேசுவரத்தில் ஃபைபர் படகுக்கு தடை உள்ளது.

இந்நிலையில், ஃபைபர் படகுகளின் பாதுகாப்பு, படகு சேதம் குறைவு, குறைவான பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களை மீன்வளத்துறை கருத்தில் கொண்டு தடையை நீக்கி ராமேசுவரம் துறைமுகத்தில் உள்ள ஃபைபர் படகுகளுக்கு அரசு வழங்கும் மீன்பிடி அனுமதி டோக்கன் மற்றும் மானிய டீசல் வழங்க வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் அனைத்து ஃபைபர் விசைப்படகு மீனவ சங்கத்தினர் சார்பில் ராமேசுவரம் மீன்வளத்துறை டோக்கன் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவப் பிரதிநிதி காரல் மார்க்ஸ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஃபைபர் படகுகளுக்கு மானிய டீசல், மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்காத மீன்வளத் துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஃபைபர் படகுகளுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் அனைத்து ஃபைபர் விசைப்படகு சங்கத்தின் மீனவர்கள், தொழிலாளிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மீனவப் பிரதிநிதி கார்ல் மார்க்ஸ் கூறியதாவது, “பாக் நீரிணை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டிணம் உள்ளிட்ட பகுதியில் உள்ள மீனவர்கள் ஃபைபர் விசைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர். அந்தப் படகுகளுக்கு அரசு மானிய டீசல் மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்குவது போல் ராமேசுவரம் துறைமுகத்தில் உள்ள ஃபைபர் படகுகளுக்கும் வழங்க வேண்டும்.

இலங்கையில் பிடிபட்டுள்ள ஃபைபர் படகுகளுக்கு அரசு உரிய மானியம் வழங்க வேண்டும். இதை நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் வருகின்ற அக்டோபர் 2-ம் தேதி தங்கச்சிமடத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT