ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தி மேம்படுத்திட வேண்டும் என டெல்லியில் நேரில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி கோரிக்கை கடிதம் அளித்துள்ளார்.
அமைச்சர் நிதின் கட்கரியிடம் நேரில் வழங்கிய கடிதத்தின் விவரம்: தேசிய நெடுஞ்சாலை 49 - ராமநாதபுரம் - ராமேசுவரம் நெடுஞ்சாலையில் பாம்பனில் இருந்து ராமேசுவரம் வரையிலான சாலை இன்னும் தரம் உயர்த்தப்படாமல் இருக்கின்றது.
நான்கு வழி சாலை திட்டத்துக்காக இந்த சாலை இன்னும் மேம்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இந்த சாலையை பாம்பனில் இருந்து இருந்து ராமேசுவரம் வரை விரைந்து தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை நீட்டித்து நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தி மேம்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.