ராமதாஸ், அன்புமணி 
தமிழகம்

ராமதாஸுக்குப் பின்னடைவு: அன்புமணி மீதான வழக்கு மே 10-க்குப் பின் விசாரணை!

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அன்புமணிக்கு எதிராக உரிமையியல் நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் விசாரணையை மே 10-ம் தேதிக்கு பின் மேற்கொள்ள வேண்டும் என உரிமையியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இது ராமதாஸுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

பாமகவின் பெயர், சின்னம், கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக் கோரி கட்சி நிறுவனர் ராமதாஸ் தரப்பில், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராமதாஸ் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அன்புமணி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, தன்னை வழக்கில் இணைக்கக் கோரி, கட்சி பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

          

இந்நிலையில், தனது மனு மீது முடிவெடுக்காததால், உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி, வடிவேல் ராவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த தடையை நீக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன் விசாரணைக்கு வந்தபோது, அன்புமணி தரப்பில், கட்சியின் தலைவராக அன்புமணியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளதாகவும், மாம்பழம் சின்னத்தை கட்சிக்கு ஒதுக்கீடு செய்து அன்புமணிக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

ஏப்ரல் 9-ம் தேதி தேர்தலை சந்திக்க உள்ள புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரண்டு வேட்பாளர்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் நடவடிக்கைகள் துவங்கிய பிறகு நீதிமன்றம் தலையிடக் கூடாது. அதனால் இந்த வழக்குகளை தேர்தலுக்குப் பிறகு தள்ளி வைக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், உரிமையியல் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? அவசரமாக வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? ராமதாஸ் எப்படி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்? தேர்தல் நடத்தப்பட்டதா?’ என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு ராமதாஸ் தரப்பில், பிரதான வழக்கில் தன்னை இணைக்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம். இது உள்கட்சி பிரச்சினை, அதற்கும் தேர்தல் நடைமுறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. வழக்கை தொடர்ந்து விசாரிக்க உரிமையியல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்குகளில் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அது தேர்தல் நடைமுறைக்கு இடையூறாக இருக்கும் எனக் கூறி, உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து உத்தரவிட்டார்.

மேலும், உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து இடைக்கால மனுக்கள் மீதான விசாரணைக்கும் தடை விதித்த நீதிபதி, அனைத்து வழக்குகளையும் தேர்தல் முடிந்து, மே 10-ம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என உரிமையியல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT