“பாமக வளர்ச்சிக்காக எப்படி எல்லாம் உழைத்தேன் என்று மீண்டும் மீண்டும் தொடர்ந்து சொல்வதற்கு எனக்கே வெட்கமாக உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூச்சத்துடன் தெரிவித்தார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சொன்னது: தேர்தல் ஆணையத்தை சந்திக்க சென்ற எனது பிரதிநிதிகளை சந்திக்க மறுத்து விட்டனர். அதன்பிறகுதான், தேர்தல் ஆணையத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். ஆனால், பொய்களை கூறி வரும் அன்புமணி தரப்பு ஆஜரானது. இவ்வாறு ஆஜராக கூடாது. ஏதோ, பரிதாபப்பட்டு நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
இவ்வழக்கில் 34 பக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், நாங்கள் தான் பாமக என வெற்றி பெற்றுள்ளோம். நாங்கள்தான் பாமக, 96 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்றேன், கால் தேய்ந்தது கட்சிக்காக எப்படி எல்லாம் உழைத்தேன் என்று மீண்டும் மீண்டும் தொடர்ந்து சொல்வதற்கு எனக்கு வெட்கமாக இருக்கிறது.
தமிழக மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் என் மீது பாசமாக இருக்கும் நிலையில், பாமகவில் எனக்கு அதிகாரம் இல்லை என சொல்ல ஒரு பிள்ளை (அன்புமணி) இருக்கிறார். நான் உருவாக்கிய பாமகவை, வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடவும், கொடியை பயன்படுத்தவும் உரிமை கிடையாது. அன்புமணி வேண்டுமானால் ஒரு புதிய கட்சியை தொடங்கலாம் என பலமுறை சொல்லிவிட்டேன்.
என்னுடன் ஏன் சண்டை போட்டு கொண்டு இருக்கிறார். உங்களுக்கும் பாமகவுக்கும் என்ன சம்பந்தம்? தந்தைக்கும் மகனுக்கும் இப்படியொரு பிரச்சினை வந்திருக்கக் கூடாது என தமிழக மக்கள் ஆச்சரியமாக கூறுகின்றனர்.
கண் தெரியவில்லை, காது கேட்கவில்லை, படுத்த படுக்கையாக இருக்கிறார் அவரை ஏன் தவறாக விமர்சிக்கின்றனர் என கேள்வி எழுப்புகின்றனர். நான் சாப்பிடும் உணவை, மற்றவருக்கு கொடுத்த பிறகு சாப்பிடலாம் என என்னுடன் இருப்பவர் கூறுகிறார். அந்த நபருக்கு அந்த விஷம் செல்லாதா? என்னால், இன்னொரு உயிர் போவது சரியாக இருக்காது. அந்தளவுக்கு நிலைமை இருக்கிறது.
ஒட்டுகேட்பு கருவி வைத்தது தொடர்பாக புகார் அளித்தும் சைபர் க்ரைம் போலீஸார் பதில் கூறவில்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நான் நியமித்த தனியார் ஏஜென்ஸியை கூட, அன்புமணி விலைக்கு வாங்கிவிட்டார். என் பெயரையும், புகைப்படத்தையும் அவர், பயன்படுத்தக்கூடாது. அவருக்கு எந்த உரிமையும் கிடையாது.
ஒரு தவறு செய்தவர், தொடர்ந்து தவறுகளை செய்து வருகிறார். பாமகவுக்கும், அன்புமணிக்கும் சம்மந்தம் கிடையாது. 34 பக்க தீர்ப்பிலும், அப்படிதான் இருக்கிறது. ஆர்.அன்புமணி என இனிஷியலை போட்டுக்கொள்ளலாம். தெரியாதது, சொல்லாதது நிறைய இருக்கிறது. எல்லாவற்றையும் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. எல்லாவற்றையும் அனுபவித்த உங்களுக்கு, எதற்கு கட்சி. உங்களுக்கு கட்சியே தேவையில்லை என்றார்.