சென்னை: உள்கட்சி பிரச்சினை முடிவுக்கு வரும்வரை மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில், அன்புமணி இன்றைக்குள் பதிலளிக்க சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாமக தலைவராக தன்னை அங்கீகரிக்கக் கோரியும், பாமகவின் பெயர், கொடி, மாம்பழம் சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும், பாமக தொடர்பான உள்கட்சி பிரச்சினை முடிவுக்கு வரும்வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கக் கோரியும் ராமதாஸ் தரப்பில் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாமக உள்கட்சி விவகாரம் தொடர்பாக ராமதாஸ் தரப்பில் தொடரப்படும் வழக்கை 3 நாட்களில் விசாரித்து முடிக்க வேண்டுமென சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக ராமதாஸ் தரப்பி்ல் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
அவகாசம் கோரிய அன்புமணி: அதன்படி இந்த மனு, நீதிபதி எம்.தர்மபிரபு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக பதிலளிக்க அன்புமணி தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு இன்றைக்குள் பதிலளிக்க அன்புமணி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளார்.