தமிழகம்

‘பாமகவுக்கு நல்லகாலம் பிறக்கப் போகுது’ - குடுகுடுப்பைக்காரர் ஸ்டைலில் சொன்ன ராமதாஸ்

செய்திப்பிரிவு

பாமக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்றும் 3-வது நாளாக நேர்காணல் நடைபெற்றது. அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்போம். தேர்தலில் போட்டியிட வேண்டும் என பலருக்கு மனசு துடிக்கிறது. ‘ராமதாஸ், நமக்கு வாய்ப்பு கொடுப்பாரா?’ என எதிர்பார்க்கின்றனர். சேலம் எம்எல்ஏ அருளின் இதய துடிப்பு 200-ஆக உள்ளது. இதுபோன்ற பிள்ளை இருக்க வேண்டும்.

          

குடுகுடுப்பைக்காரர் சொல்வது போல், ‘நமக்கு நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது.. பாமகவுக்கு நல்ல காலம் பிறக்குது’ பாமகவில் நிறைய சட்டப்பேரவை உறுப்பினர்கள் வரப்போகிறார்கள்.. நல்ல காலம் பிறக்குது. நடக்குமா? நிச்சயம் நடக்கும்.

தொண்டர்களின் உழைப்பு அதிகம். குழு ஆய்வு செய்து, விருப்ப மனுக்களை என்னிடம் பரிந்துரைக்கும். நான் இறுதி செய்வேன். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடலாம் என்ற நம்பிக்கையுடன் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வந்துள்ளவர்களில், எத்தனை பேர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக வருவீர்கள் என எனக்கு தெரியாது. நீங்கள் வெற்றி வாகை சூடி, என்னிடம் எலுமிச்சம் பழம் கொடுக்க வேண்டும் என்று பேசினார்.

பின்னர் பாமக, கொடி மற்றும் சின்னத்துக்கு உரிமைகோரி தொடர்ந்த வழக்கு குறித்து ராமதாஸ் பேசும்போது, “சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வரும் 24-ம் தேதி தெரிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், மாம்பழம் கிடைத்து

விட்டது என ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர். தீர்ப்பே வரும் 24-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சில பதர்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து, ‘நாங்கள் பதர்கள்தான்’ என்பதை நிருபித்துள்ளனர். பிப். 24-ம் தேதி வரை நாம் காத்திருப்போம். மாம்பழம், நிச்சயமாக நமக்குத்தான்” என்றார்.

SCROLL FOR NEXT