அன்புமணி, ராமதாஸ்
சென்னை: பிரச்சாரத்தின்போது தனது படத்தை பயன்படுத்த தடை கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்துள்ள புதிய மனுவுக்கு, அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
பாமகவின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என அன்புமணி தரப்புக்கு தடை விதிக்கக் கோரியும், கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்கக் கோரியும் ராமதாஸ் தரப்பில் ஏற்கெனவே சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பிரதான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இதுதொடர்பாக தடைகோரி ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை ஏற்கெனவே நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில் ராமதாஸ் தரப்பில், சென்னை 13-வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “அன்புமணி ஏற்கெனவே பாமகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். அவருக்கும் பாமகவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர் சட்டவிரோதமாக பாமகவின் தலைவராக நீடித்து வருகிறார். இதுதொடர்பான வழக்கு இதே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் எனது புகைப்படத்தை பயன்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது என அன்புமணி தரப்பில் போட்டியிடும் 18 வேட்பாளர்களுக்கும் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தர்மபிரபு, இதுதொடர்பாக அன்புமணி தரப்பில் போட்டியிடும் 18 வேட்பாளர்களும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஏப்.21-க்கு தள்ளிவைத்தார்.