தேர்தலுக்குத் தேர்தல் வெற்றிக் கூட்டணியில் இடம்பிடித்த காலம் போய் இப்போது எந்தக் கூட்டணிக்கும் போகமுடியாத இக்கட்டில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
அதிமுக கூட்டணியில் அன்புமணி முன்கூட்டியே துண்டு போட்டு இடம் பிடித்துவிட்டதால், இயல்பாகவே ராமதாஸ் திமுக அணி பக்கம் தான் போவார் என்று பேசப்பட்டது.
ஆனால், “பாமக, பாஜக இருக்கும் அணியில் விசிக இருக்காது” என திருமா அதற்கு ஆரம்பத்திலேயே அணை போட்டார். திருமாவை பகைத்துக் கொண்டு ராமதாஸை உள்ளே சேர்க்க திமுக-வும் தயாராய் இல்லை என்று தெரிந்ததும் அடுத்ததாக தவெக பக்கம் தூது போனார்கள் அய்யாவின் விசுவாசிகள்.
ஆனால், பாமக-வின் ஒரு பிரிவைகூட்டணியில் சேர்ப்பதால் வடமாவட்டங்களில் பட்டியலின மக்களின் பகையை சம்பாதிக்க வேண்டியது இருக்கும்” என ஆலோசகர்கள் எச்சரிக்கை மணி அடித்ததால் ராமதாஸுக்கு பனையூர் கேட்டும் மூடிக் கொண்டது.
இதனால், “இப்படி நாலா பக்கமும் கூட்டணி அமைக்க அல்லல்படுவதற்கு பதிலாக அய்யா தேர்தலை புறக்கணித்தே விடலாம்” என பாட்டாளி சொந்தங்கள் விரக்தியில் பேசுமளவுக்குப் போய்விட்டனர். இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் உடனான கலந்தாய்வுக் கூட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “கூட்டணியை இன்றே முடிவு செய்ய முடியாது. அதற்கான களம் இன்னும் சரியாக அமையவில்லை. நேரம் வரும்போது தெரிவிப்போம். திராவிடக் கட்சிகளுடன் கூட்டணிஇருக்கும். ‘நமக்கான வாகனம் தயாராகிவிட்டது’ என நான் தொண்டர்களுக்கு எழுதிய மடல் குறித்து கேட்கிறீர்கள். இது தேர்தல் வாகனம் தான்.. எந்த வாகனத்தில் போகிறோம் என்பது பிப். 28-ம் தேதிக்குள் தெரிவிக்கப்படும்” என்றார்.
“கூட்டணிக்கான களம் இன்னும் சரியாக அமையவில்லை” என முதலில் சொன்னவர் பிறகு, “28-ம் தேதிக்குள் எந்த வாகனத்தில் போகிறோம் என்று தெரிந்துவிடும்” என்று தெரிவித்ததில் இருந்தே எந்தத் திசையில் பயணிக்கப் போகிறோம் என்பதை அவர் இன்னும் முடிவெடுக்க முடியாமல் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.