பாமக நிறுவனர் ராமதாஸ்
சென்னை: வெப்ப அலை சூழலை கருத்தில் கொண்டு மாநிலத்தில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அதே நேரத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அறிவித்துள்ள விவசாய பயிர்கடன் தள்ளுபடி நடவடிக்கையை அவர் வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”தமிழகத்தில் கோடை விடுமுறை நிறைவடைந்ததைத் தொடர்ந்து வரும் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வரும் சூழலில், மாணவர்களின் உடல் நலன் குறித்த அச்சம் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிக வெப்பத்தில் பள்ளிக்குச் செல்வதால் நீரிழப்பு, சோர்வு, வெப்பக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. அதிக வெப்ப நிலை காரணமாக குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அவர்களின் கற்றல் திறனும் கவனிக்கும் திறனும் குறையக்கூடும்.
எனவே மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை முதன்மையாகக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு பள்ளிகள் திறக்கும் தேதியை குறைந்தபட்சம் ஒரு வார காலத்திற்கு தள்ளிப் போட வேண்டும். அதே நேரத்தில், பள்ளிகளில் போதிய குடிநீர் வசதி, காற்றோட்டமான வகுப்பறைகள் மற்றும் வெப்பத்தில் இருந்து பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் உடல்நல பாதுகாப்பே அரசின் முதன்மை பொறுப்பாகும் என்பதால், மாநிலத்தில் நிலவும் வெப்ப அலை சூழ்நிலையை தீவிரமாக பரிசீலித்து உடனடி முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று கூறியுள்ளார்.
பயிர்க்கடன் தள்ளுபடி: தொடர்ந்து அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை ராமதாஸ் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார். ”தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் உழவர்கள் பெற்ற பயிர்க் கடன்களில், குறு விவசாயிகளின் ரூ.50,000 வரையிலான கடன்களை முழுமையாகவும், அதே அளவுக்கான சிறு விவசாயிகளின் பயிர்க் கடன்களில் 50 விழுக்காட்டையும் தள்ளுபடி செய்து தமிழக அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். மேலும், ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களுக்கும் ரூ.5,000 முதல் ரூ.40,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும்.
இந்த அறிவிப்பு அனைத்து விவசாயிகளின் சுமையையும் முழுமையாக குறைக்காது என்றாலும், தற்போதைய பொருளாதார சூழலில் உழவர்களுக்கு ஒரு நம்பிக்கையையும் ஆதரவையும் வழங்கும் முயற்சியாக பார்க்கப்பட வேண்டும். தொடர்ந்து இயற்கை சீற்றங்கள், உற்பத்தி செலவுகள் உயர்வு, விளை பொருட்களுக்கு போதிய விலை இல்லாமை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு விவசாயிகளுக்கு அரசு இன்னும் விரிவான நிவாரண திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
அதேபோல், அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடு பொருட்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மானிய விலையில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். பயிர்க்கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் தொடர்ந்து விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், அவர்களுக்கு மீண்டும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் எளிதில் புதிய கடனுதவிகள் வழங்கப்பட வேண்டும். அதற்கு எந்த விதமான நிர்வாக தடைகளும் இருக்கக் கூடாது. சிறு, குறு விவசாயிகளை தவிர்த்து மீதமுள்ள விவசாயிகளுக்கும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பெற்ற பயிர் கடனை ஓரளவு நிவாரணமாக அளிக்கும் அளவுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும்.
தமிழகத்தின் முதுகெலும்பாக விளங்கும் அனைத்து விவசாயிகளை பாதுகாப்பதும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் அரசின் முதன்மை பொறுப்பாகும். அதற்கான நல்ல திட்டங்கள் தொடர்ந்து விவசாயிகளுக்கு பயன் அளிக்க நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.