ராமதாஸ்

 
தமிழகம்

மாதாந்திர மின் கட்டண முறையை அரசு செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: மின்சார தமிழகத்தில் தற்போது வீட்டு மின்சார நுகர்வோருக்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தாலும், தற்போதைய பொருளாதார சூழல், மக்களின் வாழ்வியல் தேவைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு மின்கட்டண வசூல் முறையைமாதத்துக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் மாற்றுவது காலத்தின் தேவையாக உள்ளது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் முழுப் பயனும் பொதுமக்களை சென்றடைய வேண்டுமெனில், மின் கணக்கெடுப்பு மற்றும் கட்டண வசூல் முறையிலும் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாதாந்திர மின் கட்டண முறையால் பொதுமக்கள் ஒரே நேரத்தில் அதிக தொகை செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. குடும்பங்களின் மாதாந்திர நிதி திட்டமிடல் எளிதாகும். மின் பயன்பாட்டை கண்காணித்து சிக்கனமாக பயன்படுத்த மக்கள் ஊக்க மடைவார்கள். மீட்டர் கணக்கெடுப்பில் ஏற்படும் தவறுகள் குறையும். மின் வாரியத்தின் வருவாய் வசூல் சீராக நடைபெறும். நிலுவை தொகை மற்றும் அபராதம் செலுத்தும் நுகர்வோர் எண்ணிக்கை குறையும். 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தின் பயன் தெளிவாக கணக்கிடப்படும்.

எனவே, தமிழக மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, மின்வாரிய நிர்வாகத்தை மேலும் வெளிப்படையாகவும் தமிழக அரசு உடனடியாக மாதத்துக்கு ஒரு முறை மின் கணக்கெடுப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT