விழுப்புரம்: ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி, ‘செயல் தலைவராக இல்லை, ராமதாஸின் மகளாக பேசுகிறேன்’ என்று ஆவேசமாக பேசினார். “எங்களைத் ‘துரோகி’ என்கிறார். முதல் துரோகியே அன்புமணிதான். கட்சி மற்றும் அப்பாவின் பொருளாதாரத்தை அபகரித்துச் சென்றவர் அன்புமணி.
கட்சியில் அனைத்தையும் அனுபவித்தது அன்புமணி. எங்களுக்கு அரசியல் ஆசை எதுவும் இல்லை. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் உள்ளோம்.
‘அப்பாவுக்கு ஏதாவது ஆனால் தொலைத்து விடுவேன்’ என்று அன்புமணி பேசுகிறார். நான் கேட்கிறேன், ‘யாரை தொலைச்சுடுவ’ சமூக வலைதளத்தில் என் அப்பாவை தவறாக சித்தரித்து, அவமதிக்கின்றனர். அவரின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றனர்.
அப்பாவின் தனிப்பட்ட வாழ்க்கையை குறிப்பிட்டு விமர்சிப்பவர்களுக்கு பதவியைக் கொடுத்து, அவர்களுடன் கட்டியணைத்து போட்டோ வெளியிடுகிறார். இவரெல்லாம் ஒரு பிள்ளையா?.
ஏதோ இப்போதுதான் 20 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டு வந்தது போல் அப்பாவை கேவலப்படுத்தி வருகின்றனர். 45 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. என் அம்மாவின் சம்மதத்துடன்தான் அனைத்தும் நடந்தது. என் அம்மாவுக்கு அனைத்து விஷயமும் தெரியும்.
குற்றச்சாட்டு சொல்வதற்கு வழி இல்லாததால், ‘அந்த அம்மாவால்தான் எல்லாம் நடக்கிறது’ என்று பொய் சொல்கிறார். அப்பாவைப் பற்றி கட்சியினர் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்கி இருக்கிறார். எந்த குடும்பத்தில்தான் இது நடக்கவில்லை. தனிப்பட்ட வாழ்க்கையை பேசுவதற்கு யாருக்குமே தகுதியில்லை.
‘அக்கா’ என்று கூட என்னைப் பார்க்காமல், கேவலமான பதிவு செய்கின்றனர். அன்புமணி சொல்லிதான் இது எல்லாம் நடக்கிறது. பணம், பதவிக்காக நாங்கள் இல்லை. அப்பா, அம்மாவை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்பதால் உடன் இருக்கிறோம்.
அப்பாவுக்கு உடல் நிலை பாதிக்கப்படுவதற்கு காரணமே அன்புமணிதான். அப்பாவை தனிமைப்படுத்த வேண்டும் என 10 ஆண்டுகளாக திட்டம் போட்டுள்ளனர். கூடவே இருந்தும் இதுஎங்களுக்கு தெரியவில்லை.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் பொறுமையாக இருந்தது போல், உனக்கு பொறுமையாக இருக்க தெரியாதா..? ‘எனக்கு அடுத்தது அன்புமணிதான்’ என அப்பா ஏற்கெனவே கூறியிருக்கிறார். அதற்குள் உனக்கு என்ன அவசரம்? நல்ல பிள்ளையாக இருக்க முடியாதவர், எப்படி நல்ல தலைவராக இருப்பார். இவரை ஆதரிப்பது ஆபத்து” என்றார்.